ஃபோட்டோஷாப் மூலம் பரவிய வதந்தி: நடவடிக்கை எடுக்க கனிமொழி சார்பில் உதவி ஆணையரிடம் புகார்!

கனிமொழி எந்த மதத்துக்கும் எதிரி கிடையாது

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தினம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். அந்தவகையில், ஈஷா யோகா அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் இந்து முன்னணி அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் நலம் விசாரித்தனர்.

இவர்களது சந்திப்பு தொடர்பாக, ‘ஆன்மீகவாதிகள் கருணாநிதியை பார்க்க வேண்டிய அவசியமில்லை’ எனக் கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் கூறியது போல் ஃபோட்டோஷாப் ஒன்று வைரலானது. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கனிமொழி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ‘கனிமொழி சொல்லாததை விஷமிகள் ஃபோட்டோஷாப் மூலம் பரப்புகின்றனர். இதுபோன்ற வதந்திகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: காவேரி மருத்துவமனையில் 4-வது நாளாக கருணாநிதி LIVE UPDATES

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கனிமொழி சார்பில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர், வழக்கறிஞர் செல்வநாயகம் சென்னை உதவி ஆணையருக்கு புகார் அளித்துள்ளார்.

அதில், ‘தமிழகம் முழுவதும் தொடர் சுற்றுப் பயணங்கள் செய்தும், அறிக்கைகள் மூலமாகவும், தி.மு.க-வின் கருத்துகளை ஓங்கி ஒலித்து தி.மு.க-வினரிடேயும், பொதுமக்களிடையேயும் கனிமொழி நன்மதிப்பைப் பெற்றுள்ளார். தற்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை இரவு பகலாக மருத்துவமனையிலிருந்து அவர் கவனித்துவருகிறார். இதற்கிடையில், கனிமொழியின் ட்விட்டர் கணக்குபோன்று போட்டோஷாப்பில் உருவாக்கி, ‘அதில் அவர் இந்து மதத்துக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டது போன்ற கருத்துகளை சிலர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தி.மு.க, நாத்திக கருத்துகளைத் தனது சித்தாந்தத்தில் கடைப்பிடிக்கிறது. ஆனால், அனைத்து மதத்தினரின் உணர்வுகளை மதிக்க அண்ணா, கருணாநிதியால் தி.மு.க-வினர் அனைவரும் பக்குவப்படுத்தப்பட்டுள்ளனர். அதை, கனிமொழி தன் அரசியல் வாழ்வில் பல தருணங்களில் வெளிப்படுத்திவருகிறார். அவர், எந்த மதத்துக்கும் எதிரி கிடையாது. மூட நம்பிக்கைக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மட்டுமே எதிரி. ஆகவே, கனிமொழி குறித்து அவதூறான கருத்துகளை இணையத்தில் பரப்புபவர்களைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close