scorecardresearch

விலைவாசி உயர்வால் பாதிப்பு… மூன்று வேளையும் சட்னி அரைத்தா சாப்பிட முடியும்? கனிமொழி கேள்வி!

“வெங்காயம் தக்காளி விலை குறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். அதை வைத்து 3 வேளையும் சட்னியா அரைத்து சாப்பிடம் முடியும்” என்று கேள்வி எழுப்பி திமுக எம்.பி கனிமொழி மக்களவையில் மத்திய அரசைச் சாடியுள்ளார்.

விலைவாசி உயர்வால் பாதிப்பு… மூன்று வேளையும் சட்னி அரைத்தா சாப்பிட முடியும்? கனிமொழி கேள்வி!

“சாமானிய மக்களின் உணவுப்பொருட்கள் மீது ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்கு உணவளிக்கவே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காயம் தக்காளி விலை குறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். அதை வைத்து 3 வேளையும் சட்னியா அரைத்து சாப்பிடம் முடியும்” என்று கேள்வி எழுப்பி திமுக எம்.பி கனிமொழி மக்களவையில் மத்திய அரசைச் சாடியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்காத மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனங்களை லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு அவைகளிலும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி பேசியுள்ளார். திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் பேசியதாவது: “இப்போது பேசி அமர்ந்திருக்கக்கூடிய பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ரிஷிகாந்த் துபே, பேசும்போது கறுப்புப் பணத்தைப் பற்றி குறிபிட்டுப் பேசினார். கோடி கோடியாக பாஜக ஆளாத மாநிலங்களில் கைப்பற்றப்பட்டிருப்பதாக எடுத்துச் சொன்னார். எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். 2016-இல் பண மதிப்பிழப்பு கொண்டு வந்து அதற்கு பிறகு கறுப்புப் பணம் என்பதே இல்லாமல் ஆகிவிடும் என்று அறிவித்தார்கள். அதற்கு பிறகும் இந்த நாட்டிலே எப்படி கறுப்புப் பணம் எப்படி உலவுகிறது என்பதை அவர் எனக்குச் சொன்னால் வசதியாக இருக்கும். ஏனென்றால், அந்த பணமதிப்பிழப்பிற்குப் பிறகு, இந்தியா மிகப் பெரிய அளவிலே பொருளாதாரத்தில் சரிந்திருக்கிறது.

பாஜகவுடன் தமிழ்நாட்டிலே கூட்டணியில் இருக்ககூடிய, அதிமுக ஆட்சி செய்த கால கட்டத்திலே, எங்களுடைய சட்டமன்றத்தில் அரசாங்க கொள்கைக் குறிப்பில், பணமதிப்பிழப்பால் சிறுகுறு தொழிற்சாலைகள் 50,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். எத்தனையோ பேர், பண மதிப்பிழப்பு காலகட்டத்திலே அங்கே வரிசையில் நின்று உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனையோ இன்னல்களை இந்த நாடு சந்தித்தது. இதற்கெல்லாம் காரணம் அதை பொறுமையாக இந்த நாடு ஏற்றுக்கொண்டது. இவர்கள் சொன்ன வாக்கு என்ன என்றால் அதற்குப் பிறகு கறுப்புப் பணம் இருக்காது என்று. ஆனால், இப்போதும் கறுப்புப் பணம், கறுப்புப் பணம் கிடைக்கிறது என்று பேசிக்கொண்டிருக்கும்போது, இத்தனை இன்னல்களையும் இத்தனை பொருளாதாரச் சரிவையும் ஏன் சந்தித்தோம் என்று அவர்கள் ஒரு விளக்கத்தை அளித்தால், அதுதான் உயிரிழந்திருக்கக்கூடிய மக்களுக்கு நியாயமாக இருக்கும்.

இன்று பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு குழந்தை ஹிந்தில் கடிதம் எழுதியிருக்கிறது.

கனூஜ் மாவட்டத்தில் இருந்து ஒரு குழந்தை, என்னுடைய பெயர் ஹிருதி துபே, நான் ஒன்றாம் வகுப்பிலே படிக்கிறேன். மோடி அவர்களே நீங்கள் விலைவாசியை பெரிய அளவிலே உயர்த்தி இருக்கிறீர்கள். பென்சில், ரப்பர் வாங்குவதுகூட விலை அதிகமாக இருக்கிறது. மேகியின் விலையும் உயர்ந்திருக்கிறது. பென்சில் கேட்டதற்காக என்னுடைய அம்மா அடிக்கிறார். நான் என்ன செய்வது? மற்ற குழந்தைகளுக்கு பென்சில்கூட கிடைக்காமல் இருக்கலாம். இதற்கு அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?” என்று கனிமொழி கேள்வி எழுப்பினார்.

அப்போது பாஜக எம்.பி.க்கள் கனிமொழி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் கனிமொழிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, நீங்கள் பேசுவது எனக்கு தெரியவில்லை. ஒன்று தமிழில் பேசுங்கள். இங்லீஷில் பேசுங்கள். நீங்கள் எந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. சற்று நேரத்திற்கு முன்னர்தான் உங்கள் அமைச்சர் பெருமகன் எழுந்து, நீங்கள் பேசும்போது நாங்கள் அமைதியாக இருக்கிறோம். அதனால், நாங்கள் பேசும்போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். அந்த வாக்குறுதியையும் நீங்கள் காற்றில் பறக்க விட்டால் எப்படி?

இப்படி, ஒவ்வொன்றாக மக்கள் பாதிக்கப்படக்கூடிய அளவிலே, அடித்தட்டிலே இருக்கக்கூடிய மக்கள், வாழ்க்கையே போராட்டமாக மாறக்கூடிய ஒரு நிலையை இந்த ஆட்சி உருவாக்கி வைத்திருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு காரணமாக ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்போது சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சில தொழில் அதிபர்கள் வாழ்வதற்கு அரசு உதவி செய்து வருகிறது. ஆனால் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது.ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்கு உணவளிக்கவே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், ஒன்றிய அமைச்சர் பேசுகையில், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக கூறுகிறார். மூன்று வேளையும் சட்டினியை மட்டும் அறைத்து சாப்பிட முடியுமா?

ஒரு பக்கம் விலைவாசி ஏறிக்கொண்டே இருக்கிறது. மறுபக்கம் வருமானம் அதிகரிக்க வழியே இல்லை. வேலையும் கிடைக்கவில்லை. அடிப்படை உணவுப் பொருட்களின் விலையைக் கூட ஒவ்வொரு நாளும் நீங்கள் ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். அதைக் குறைப்பதற்கு எந்த வழிவகையும் செய்யாத ஒரு நிலை இருக்கும்போது, இங்கே இருக்ககூடிய மக்கள் எப்படி வாழ்வது என்று இந்த அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்.

இங்கே தூபே அவர்கள் பேசும்பொழுது, பிஜேபி ஆளாதா எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஆர்.பி.ஐ எந்தக் கடனும் கொடுக்கத் தயாராக இல்லை என்று கூறினார். நீங்கள் எங்களுக்கு எந்த கடனும் தர வேண்டாம். ஆனால், எங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை அளித்தாலே போதும். நாங்கள் யாரிடமும் கடன் வாங்கத்தேவையில்லை, எங்களால் ஒரு வளமான மாநிலமாக மேலும் உயர முடியும்” என்று கனிமொழி எம்.பி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kanimozhi mp speech in lok sabha she attacks central govt for price hike