Advertisment

கண்ணகி - முருகேசன் கொலை வழக்கில் பேரம் பேசினாரா திருமாவளவன்? சர்ச்சையும் விவாதமும்

தமிழ்நாட்டில் தலித் அரசியலை முன்னெடுத்துவரும் விசிக தலைவர் திருமாவளவன், கண்ணகி - முருகேசன் கொலை வழக்கு விவகாரத்தில், முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவிடம் பேரம் பேசியதாக வெளியான குற்றச்சாட்டு கடும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Kannagi - Murugesan murder case, Kannagi - Murugesan honour killing case judgement, did negotiate Thirumavavalan controversy, Kannagi - Murugesan murder case debates, கண்ணகி முருகேசன் கொலை வழக்கு, பேரம் பேசினாரா திருமாவளவன், விசிக திருமாவளவன், தமுஎகச, ஆதவன் தீட்சண்யா, வழக்கறிஞர் பொ ரத்தினம், சர்ச்சை விவாதம், Kannagi - Murugesan, thirumaavalavan, vck, tamil news, tamil nadu news

கடலூர் மாவட்டத்தில் 2003ம் ஆண்டு நடைபெற்ற கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை தமிழ்நாட்டையே உலுக்கிய கொடூரமான சம்பவம். இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வெளியானது. 18 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பில் கடலூர் சிறப்பு நீதிமன்றம் ஒருவருக்கு தூக்கு தண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.

Advertisment

இந்த சூழலில்தான், கண்ணகி - முருகேசன் கொலை வழக்கில் உறுதியாக வாதாடி நீதி பெற்றுத் தந்த வழக்கறிஞர் பொ.ரத்தினம், ஒரு நேர்காணலில் கண்ணகி முருகேசன் கொலை வழக்கில் திருமாவளவன் இறந்த முருகேசனின் தந்தையிடம் “எதுக்கு இந்த வழக்கை நடத்துகிறீர்கள். பெருந்தொகை தருகிறேன் என்கிறார்கள். பகைமையை தேடிக்கொள்வீர்கள், தண்டனையாகிவிட்டால் எல்லாம் கொதித்துவிடுவார்கள்” என்று பேரம் பேசியதாகவும் அதற்கு முருகேசனின் தந்தை மறுத்ததாகவும் தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

இதனிடையே, தமுஎசக மாநில செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யாவும் 2007ம் ஆண்டு உண்மை அறியும் குழுவில் இடம்பெற்று நேரில் சென்று கள ஆய்வு செய்து ஒரு கட்டுரை எழுதினார். அதிலும் திருமாவளவன், பேரம்பேசியதாக கருத்து பதிவானதைக் குறிப்பிட்டு திருமாவளவனை விமர்சித்தனர்.

கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து வேலை செய்துகொண்டிருந்த புதுக்காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் முருகேசன் புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த மற்றொரு சாதி பெண் கண்ணகியும் காதலித்து திருமணம் செய்துகொண்டதை எதிர்த்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை கொலை செய்து எரித்தனர். இந்த சாதி ஆணவக்கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இப்படியான ஒரு வழக்கில், தமிழ்நாட்டில் தலித் அரசியலை முன்னெடுத்துவரும் முக்கிய கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கண்ணகி - முருகேசன் கொலை வழக்கு விவகாரத்தில், வழக்கை நடத்த வேண்டாம் என முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவிடம் பேரம் பேசியதாக வெளியான குற்றச்சாட்டு கடும் சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் உள்ளானது.

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விசிக சார்பில் 'மீண்டெழும் சாம்பலின் நீதி' என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கருத்தரங்கில் பேசிய விசிக பொதுச் செயலாளரும் காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன் ஊறுகையில், “கண்ணகி - முருகேசன் கொலை குறித்து திருமாவின் கவனத்துக்குக் கொண்டுசென்ற பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து உலகறியச் செய்தார். கூடவே, சிபிஐ விசாரணையும் கேட்டார். இன்றைய தீர்ப்புக்கு அடிப்படை விசிகவின் கடுமையான களப்பணிதான். இந்த வழக்கில் விசிக சமரசமாகப் போக முயன்றது என்று எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, வழக்கறிஞர் பொ.ரத்தினம் போன்றோர் மோசமான கருத்துக்களைப் பரப்புகிறார்கள். திருமாவளவனின் ஒரே சொத்து அவரது நற்பெயர்தான். அதை எரிப்பது அவரை உயிரோடு எரிப்பதைவிட கொடூரமானது” என்று கூறினார்.

இதையடுத்து, இந்த கருத்தரங்கில், இறந்த முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவையும், தம்பி பழனிவேலையும் வீடியோ மூலம் பேச வைத்தார்கள். அப்போது திருமாவளவன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறு சாமிக்கண்ணுவிடம் கேட்க, அவரும் திருமா பெயரைச் சொல்லி அன்றைய மாவட்டச் செயலாளர் கருப்புச்சாமி விருத்தாச்சலத்தில் ஒரு லாட்ஜுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விசிக நிர்வாகிகள் சிலரும், பாமக நகரச் செயலாளரும் இருந்ததாகவும், இந்த வழக்கைச் சமாதானமாகப் பேசி முடித்துவிடலாம் என்று அவர்கள் பேசியதாகவும் கூறினார்.

முதுமை காரணமாக சாமிக்கண்ணுவுக்குச் சரியாகக் காது கேட்காததால் அவரது மகன் பழனிவேலு குறுக்கிட்டு, “அப்பாவுக்கு அப்போது திருமாவளவனை அடையாளம் தெரியாது. எனவே, கருப்புச்சாமியையே திருமாவளவன் பேசியதாகக் கருதிக்கொண்டார். நான்தான் விளக்கம் சொல்லி அவரை அங்கிருந்து அழைத்துவந்தேன்” என்று கூறினார்.

இதையடுத்து, சாமிக்கண்ணு, பழனிவேல் ஆகியோரிடம் திருமாவளவன் நேரடியாக பேசினார். “என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையா?" என்று அவர்களிடம் கேட்டார். திருமாவளவனின் கேள்விக்கு பதிலளித்த பழனிவேல், “உங்களைத் தவறாகச் சொல்ல மாட்டேன். நீங்க இல்லாவிட்டால் இந்த வழக்கை இவ்வளவு தூரம் கொண்டுவந்திருக்க முடியாது” என்று கூறினார். அப்போது, திருமாவளவன், “தன்னைப் பற்றி வழக்கறிஞர் ரத்தினம், ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ் போன்றோர் சொல்கிற குற்றச்சாட்டு பற்றி கேட்டார். அதற்கு பழனிவேல், “உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. நாங்கள் சென்னைக்கு வந்து உங்களைச் சந்திக்கிறோம். பிறகு பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

சாமிக்கண்ணுவும் பழனிவேலும் பேசியதை அடுத்து, “எழுதுகிறவனுக்கும் மனசாட்சி இல்லை, அவதூறு பரப்புகிறவர்களுக்கும் மனசாட்சி இல்லை. இந்த மாதிரி பிழைப்பு நடத்துகிறவன் நானில்லை. அதற்குத் தூக்குப் போட்டு சாகலாம். மருந்தைக் குடித்துவிட்டுச் சாகலாம். இப்படியெல்லாம் அவதூறு பரப்பினால் எப்படி எதிர்கொள்ள முடியும்?” உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

இந்த கருத்தரங்கில் இறுதியாக பேசிய திருமாவளவன், “என் மீதான அவதூறுகள் ஆதவன் தீட்சண்யா எழுதிய கட்டுரையில் இருந்து தொடங்கியதாக அறிகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு இயக்கத்தை நடத்துகிற திருமாவளவன் பற்றி ஒரு அவதூறு வந்தால், அது உண்மையா என்று கேட்க வேண்டாமா? ரத்தினம் சொன்னார் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு திருமாவளவன் இப்படிப்பட்டவர் என்று இவர்களே பரப்புவது அதிர்ச்சியைத் தருகிறது.

திண்ணியம் பிரச்சினையில் இப்படித்தான், விசிகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் சாதி வெறியர்களுக்கு ஆதரவாகப் பேசினார் என்று ரத்தினம் என்னிடம் கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பே, திருமாவும் சாதி வெறியர்களுக்கு ஆதரவாகப் போய்விட்டார்' என்று துண்டறிக்கை போட்டு ஊரெல்லாம் கொடுத்தார். மோடி, அமித் ஷா போன்றோர்களை அம்பலப்படுத்துவதைவிட திருமாவை அம்பலப்படுத்துவதுதான் அவர்களது இலக்கு என்றால் அவர்களது சிந்தனை எந்த நோக்கில் இயங்குகிறது? ரத்தினத்தோடு எனக்கு எந்த முரண்பாடும் இல்லை, அவரைப் பற்றி நான் யாரிடமும் குறை சொன்னது கூட இல்லை. அப்படியிருந்தும் தொடர்ந்து 15, 20 ஆண்டுகளாக என்னை விமர்சிக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

இங்கே நான் இவ்வளவு தூரம் விளக்கம் தருவதற்குக் காரணம், ஏதாவது தவறு நடந்திருக்குமோ என்று நம்முடைய கட்சித் தோழர்களுக்கு எந்த மயக்கமும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். என்னுடைய மானம்தான் இந்த இயக்கத்தின் வலிமையாக இருக்கிறது. காசுக்காக, பதவிக்காக ஒடுக்கப்பட்ட மக்களை அடமானம் வைக்கிற நிலை எனக்கு எந்தக் காலத்திலும் ஏற்படாது” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, விசிக ஆதரவாளர்கள், ஆதவன் தீட்சண்யாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் 'டேக்' செய்து, "முருகேசன் குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துவிட்டார்கள். நீங்கள் செய்தது கள ஆய்வா, கள்ள ஆய்வா?" என்று கேள்வி எழுப்பினார்கள்.

இது குறித்து ஊடகங்களில் விளக்கம் அளித்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, “18.2.2007 அன்று உண்மை அறியும் குழுவில் ஒருவனாக நான் முருகேசனின் வீட்டிற்குச் சென்றேன். 'அந்தக் குடும்பத்துக்கு கடுமையான நெருக்கடி தருகிறார்கள். பல்வேறு தளங்களில் செயல்படுபவர்கள் எல்லாம் ஒரு குழுவாகப் போய் வந்தால் அவர்களுக்கு உளவியல் ரீதியாகப் பலம் கிடைக்கும்' என்று வழக்கறிஞர் பொ.ரத்தினம் சொன்னார். சம்பவம் நடந்த இடத்தைப் பார்த்துவிட்டு, நேரில் கண்டவர்களிடமும் பேசிவிட்டு வந்தோம். அங்கு சென்று வந்ததில் இருந்து நான் ரெஸ்ட்லெஸ் ஆகிவிட்டேன். அந்த அனுபவத்தை, வலியை, வேதனையை 'சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்' என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டேன். நீண்ட கட்டுரையின் ஒரு பகுதியாக,

இதனிடையே, விடுதலை சிறுத்தையில இருக்குற எங்க சொந்தக்காரன் ஊத்தங்கால் சண்முகம் ஒருநாள் வந்தான். இந்தாங்க அண்ணன் (திருமாவளவன்) பேசறார்னு செல்போனை என்கிட்ட கொடுத்தான். ‘கேஸ் அது இதுன்னு விஷயத்தைப் பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்னார்’ என்று அய்யாச்சாமி சொன்னதையும், ‘வழக்கை வாபஸ் வாங்கிடுங்கன்னார் திருமாவளவன். அதெல்லாம் வக்கீல் ஐயாதான் முடிவெடுக்கணும்னு சொன்னேன். வழக்கு போட்டது நீங்க. இதுல வக்கீலுக்கு நடுவுல என்ன வேலை? நீங்களே முடிவெடுங்க. ஒத்துக்கிட்டா பணம்கூட கணிசமா தர்றதா சொல்றாங்கன்னார் அவர். காசு வரும். எம்புள்ள வருமான்னு கேட்டுட்டு போனை கட் பண்ணிட்டேன்” என்று கூறினார்.

2007-ல் நான் எழுதிய இந்தக் கட்டுரை எனது 'புதுவிசை' பத்திரிகையில் வெளிவந்தது. அப்போது விசிகவினர் அதற்கு மறுப்பு சொல்லியிருக்கலாம். ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. அதன்பிறகு மலேசியாவில் நடந்த பன்னாட்டு பகுத்தறிவாளர் மாநாட்டில் தோழர் திருமாவை நேரில் சந்தித்தேன். அப்போதுகூட எனது கட்டுரை குறித்து திருமாவிடம் நேரிலேயே முறையிட்டார்கள் சில தோழர்கள். 'களத்தில் இருந்து கிடைக்கிற தகவல்களின் அடிப்படையில் சில முடிவுகளை நான் எடுக்கிறேன். எல்லாம் சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எங்கள் செயல்பாடு பற்றி தூரத்தில் இருந்து விமர்சிக்கிறார்களே தவிர, பக்கத்தில் வந்து யாரும் ஆலோசனை சொல்வதில்லை' என்றார் திருமா.

அந்தச் சந்திப்பின் அடிப்படையில், 'கண்டேன் களைப்படைந்த என் தோழனை' என்று ஒரு கட்டுரையும் எழுதினேன். இதெல்லாம் முடிந்துபோன விஷயம். இந்த நேரத்தில் கண்ணகி முருகேசன் வழக்கில் தீர்ப்பு வந்ததும் அந்தச் சம்பவம் குறித்து தெரிந்துகொள்ள இணையத்தில் பலர் தேடியிருக்கிறார்கள். அப்போது என்னுடைய பழைய கட்டுரை மேலே வந்துவிட்டது. அன்றைய என்னுடைய நிலைப்பாடு வேறு, இன்றைய நிலைப்பாடு வேறு. நான் அன்று நேரில் கேட்டறிந்ததை மனசாட்சியுடன் பதிவு செய்திருக்கிறேன். அதைப் பொய் என்று திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மைதான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படும். இதற்காகத்தான் பாஜகவினர் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். எனவே, நான் அந்த மாதிரியான கட்டத்தை நோக்கிப் போக வேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே, திருமாவளவனுக்கே அந்த ஆதாரங்களைத் தனியாக அனுப்பிவைக்கலாம் என்றிருக்கிறேன்” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Thirumavalavan Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment