கன்னியாகுமரியில் ஓகி பாதிப்பு : மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ தொடர் சத்தியாகிரகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரபட்சம் இல்லாமல் ஓகி நிவாரணம் வழங்க வலியுறுத்தி பத்மநாபபுரம் திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் தொடர் போராட்டம் நடத்துகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரபட்சம் இல்லாமல் ஓகி நிவாரணம் வழங்க வலியுறுத்தி பத்மநாபபுரம் திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் தொடர் போராட்டம் நடத்துகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை நவம்பர் 30-ம் தேதி ஓகி புயல் கடுமையாக தாக்கியது. அதில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மாயமானார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டாலும், சில நூறு பேர் இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை. அவர்களுக்கு முறையான நிவாரணமும் கிடைக்கவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விவசாய வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் பாரபட்சமில்லாமல் மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்கிறகோரிக்கை முன் வைக்கப்படுகிறது. பத்மநாபபுரம் சட்டமன்ற திமுக உறுப்பினரான மனோ தங்கராஜ் கீழ்கண்ட 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டத்தின் மையப் பகுதியான புலியூர் குறிச்சியில் ஜனவரி 2-ம் தேதி முதல் தொடர் சத்தியாகிரகம் போராட்டம் நடத்தி வருகிறார்.

கன்னியாகுமரியை அழிக்கும் கனிமவள கொள்ளையர்களிடம் இருந்து நம் இயற்கை வளத்தை காக்கவும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கட்சி, ஜாதி, மதம், இனம் கடந்து அனைவருக்கும் சமமான நிவாரணம் கிடைத்திடவும், சாலைகளை லஞ்சம் ஊழல் இன்றி தரமாக அமைத்திடவும், நம் வேலைக்காரர்களான அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளை மக்களுக்கு தாமதமின்றி செய்திடவும், அரசு பேருந்துக்களை தரமாக பராமரித்து தூய்மையாக இயக்கிடவும் வலியுறுத்தி கட்சி பாகுபாடின்றி பொதுமக்களுக்காக புலியூர்குறிச்சி பத்மநாபபுரம் சட்டமன்ற அலுவலக வாயிலில் நடைபெறும் தொடர் அறப்போராட்டத்திற்கு அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளித்திட வேண்டும் என மனோ தங்கராஜ் வேண்டுகோள் வைத்தார்.

அதன்படி 2-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. உணவு எடுத்துக் கொள்ளாமல் போராட்டத்தை தொடர்ந்த மனோ தங்கராஜூக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு மீண்டும் போராட்டக் களத்திற்கு வந்தார் அவர். மாவட்டம் முழுவதும் இருந்து இளைஞர்கள் பலரும் அந்தப் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

புலியூர்குறிச்சி போராட்டப் பந்தலில் தாசில்தார், டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் வந்து போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் தங்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என மனோ தங்கராஜ் கூறினார். சட்டமன்றம் கூடவிருக்கும் நிலையில் இந்தப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

×Close
×Close