கர்நாடக தமிழ் மக்கள் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் : திருமாவளவன் வேண்டுகோள்

'கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அணியை ஆதரித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்'

கர்நாடக தமிழ் மக்கள் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் வைத்து அறிக்கை விட்டார்.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

கர்நாடகாவில் நடப்பது சட்டமன்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; இன்னும் ஒரு ஆண்டுக்குள் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமும் ஆகும். 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வகுப்புவாத சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடாமல் தடுப்பதற்கு அவர்களை கர்நாடகாவில் வீழ்த்துவது அவசியமாகும்.

எனவே, நாட்டு நலன் கருதி, மதச்சார்பின்மைப் பாதுகாப்புக் கருதி, கர்நாடக வாழ் தமிழர்கள், மற்றும் இதர ஜனநாயக சக்திகள், மதச்சார்பற்ற சக்திகளைக் குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான அணியை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே தற்போதைய நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான மதவெறி சக்திகளை முறியடிக்க முடியுமென விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.

காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்த பிறகும் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்து வருகிறது. மோடி அரசின் சூழ்ச்சியின் காரணமாக தமிழக கர்நாடக மக்களிடையே பகை உணர்வு அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தனது குறுகிய தேர்தல் நோக்கத்துக்காக அண்டை மாநிலங்களுக்கு இடையே மோதலை உருவாக்க முற்படும் பாஜக.விற்கு பாடம் புகட்டிட வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு அவர்கள் செய்யும் துரோகத்துக்கு இங்கே அவர்களைத் தோற்கடித்தால் மட்டும் போதாது. கர்நாடகத்திலும் தோல்வியுறச் செய்ய வேண்டும். இதை உணர்ந்து கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் இதர ஜனநாயக சக்திகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அணியை ஆதரித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.’ இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close