கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள்: 'தென்னிந்தியாவில் பாஜக பிரம்மாண்டமாக நுழைவதற்கான வெற்றி இது!' - ஓ.பன்னீர் செல்வம்

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2018

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2018: கர்நாடகாவில் கடந்த 12-ம் தேதி 222 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் உட்பட‌ 2622 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ், மஜத, இந்திய குடியரசு கட்சி, அதிமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக 30 தமிழர்களும் களமிறங்கினர். காங்கிரஸ் கட்சி 221, பாஜக 222, மஜத 199 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின.

பிற்பகல் 02.15 மணி நிலரவப்படி, ஆளும் காங்கிரஸ் கட்சி 75 இடங்களிலும், பாஜக 105 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 39 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, தொங்கு சட்டசபை அமையும் என்று தகவல் வெளியானது. இருந்தாலும், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிவந்தது.

ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களில் பாஜக கைப்பற்றும் என கூறப்படுகிறது. இதனால் தனிபெரும்பான்மையோடு பாஜக கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “இந்த மகிழ்ச்சியான தருணத்தில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், குறிப்பிடத்தகுந்த வெற்றிப் பெற்ற பாஜகவிற்கு நான் என்பது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன். இந்த வெற்றி, தென்னிந்தியாவில் பாஜக பிரம்மாண்டமாக நுழைவதற்கு காரணமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close