காங்கிரஸ் கட்சி சிவகங்கைக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்காமல் இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க மேலிடத்திற்கு விருப்பம் இல்லையா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
2019 மக்களவைத் தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல், நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று (மார்ச் 22) இரவு அறிவிக்கப்பட்டது. திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் 8 தொகுதிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
முக்கிய தொகுதியான சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. சிவகங்கை தொகுதி அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் சொந்தத் தொகுதி. 1984 முதல் 1999 வரை தொடர்ந்து 5 முறை இங்கு ப.சிதம்பரம் எம்.பி.யாக வெற்றி பெற்றிருக்கிறார்.
இடையில் ஒருமுறை மட்டும் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை நடத்திய ப.சிதம்பரம் இங்கு களம் காணவில்லை. அப்போதும் காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன் இங்கு போட்டியிட்டு வென்றார். மீண்டும் 2004, 2009 தேர்தல்களில் எம்.பி ஆனார் ப.சிதம்பரம்.
கடந்த 2014 தேர்தலில் காங்கிரஸ் தனித்து களம் கண்டபோது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு ஒரு லட்சத்து நான்காயிரம் வாக்குகள் பெற்றார். எனவே மீண்டும் அவரையே அங்கு வேட்பாளராக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
Read More: திடீர் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: தேனியில் யார் ‘கை’ ஓங்கும்?
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, வேட்பாளர் தேர்வு நடைமுறைகளில் மாநில காங்கிரஸ் தலைவருக்கும், கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவருக்கும் முக்கிய பங்கு உண்டு. தற்போது மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்தான். எனவே இவர்கள் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் பெற்றுக் கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இறுதிகட்டமாக சோனியா இல்லத்தில் நேற்று மாலை நடந்த ஆலோசனையிலும் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். ஆனால் நள்ளிரவில் வெளியான வேட்பாளர் அறிவிப்பில் கார்த்தி சிதம்பரம் பெயர் இடம் பெறவில்லை.
காங்கிரஸ் வட்டாரங்களில் இது குறித்து விசாரித்தபோது, ‘கார்த்தி சிதம்பரத்திற்கு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எப்போதுமே விரும்பி பொறுப்புகளை கொடுத்ததில்லை. சில வழக்கு நெருக்கடிகளிலும் கார்த்தி சிதம்பரம் சிக்கியிருப்பதால், சீட் வழங்க மேலிடம் யோசிக்கிறது’ என்கிறார்கள்.
ஆனால் கடந்த தேர்தலில் காங்கிரஸ் இக்கட்டான சூழலில் இருந்தபோது, தோற்போம் என தெரிந்தும் களம் இறங்கி கணிசமான வாக்குகளை கார்த்தி சிதம்பரம் பெற்றதை வேறு சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். தற்போது வெற்றி வாய்ப்புள்ள சூழலில் அவருக்கே தொகுதியை வழங்குவதுதான் சரி என்பது இவர்கள் வாதம்.
‘ப.சிதம்பரம் கடந்த 2016-ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு பெற்றார். ராஜ்யசபா எம்.பி.க்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரின் வாரிசுகளுக்கு சீட் வழங்குவதில்லை என்பது அகில இந்திய அளவில் கட்சி எடுத்திருக்கும் முடிவு. அதனால்தான் கார்த்தி சிதம்பரத்திற்கு மேலிடத்தால் சீட் வழங்க முடியவில்லை’ என இன்னொரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினராக இருப்பவருக்கு, லோக்சபா சீட் வழங்குவதில்லை என்பதும்கூட காங்கிரஸ் மேலிடத்தின் நிலைப்பாடுதான். ஆனால் கன்னியாகுமரியில் வெற்றிவாய்ப்பை கருத்தில் கொண்டு, பக்கத்து மாவட்ட எம்.எல்.ஏ.வான வசந்தகுமாருக்கு சீட் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே வெற்றி வாய்ப்பு என்கிற அளவுகோல் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்திற்கும் சீட் வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இன்று இரவுக்குள் இதில் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook
Web Title:Karthi p chidambaram sivagangai lok sabha constituency
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி