By: WebDesk
Updated: December 9, 2018, 08:06:08 AM
மேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் – டெல்லி கிளம்பும் முன் ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவிற்கு பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். இந்த விழாவினை பிரம்மாண்டமாக செய்ய திமுக திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள், பிரமுகர்களுக்கும் கருணாநிதி உருவ சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இருவரும் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர்கள். எனவே விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாநிதியின் உருவச் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளார். தமிழகத்திற்கு சோனியா வந்து நீண்ட காலமாகிறது. இதனால், கருணாநிதி சிலை திறக்க சோனியா காந்தி வருவது அரசியல் ரீதியாக மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (அக்.9) மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்குகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படும் ஸ்டாலின், அங்கு பகல் 11.30 மணியளவில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். அப்போது, சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்து விழாவிற்கு வருமாறு முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளார்.
இதைத் தொடர்ந்து, மற்றொரு முக்கிய நிகழ்வாக 10ம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பாஜகவுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்துகின்றன. இதிலும், ஸ்டாலின் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இந்த நிலையில், டெல்லி புறப்படும்முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழை சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தலைவர்களுக்கு வழங்க உள்ளதாகவும், பா.ஜனதா கட்சிக்கு எதிராக உள்ள கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் நாளை பங்கேற்க உள்ளதாகவும், மேகதாது அணை குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.