செந்தில்பாலாஜி திமுக.வில் இணைகிறார்: ஆதரவாளர்கள் சென்னை பயணம்

Karur V Senthil Balaji vs TTV Dhinakaran: டிடிவி தினகரன் கட்சியில் இருந்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சிலரையும் தன்னுடன் அழைத்துச் செல்ல செந்தில் பாலாஜி தீவிரமாக இருக்கிறார். அது நடக்குமா?

By: Updated: December 13, 2018, 07:51:03 PM

Karur V Senthil Balaji Joins with DMK: கரூர் செந்தில் பாலாஜி திமுக.வில் இணைகிறார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் சென்னைக்கு பயணமானார்கள். தன்னுடன் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு செல்ல செந்தில் பாலாஜி தீவிரமாக இருக்கிறார். இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வட்டாரத்தில் அதிர்ச்சி பரவியிருக்கிறது.

டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராகக் கொண்டு இயங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராக இருப்பவர் செந்தில் பாலாஜி. அந்தக் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளரும் இவர்தான்.

டிடிவி தினகரன் கட்சியின் கஜானாவில் முக்கியமானவராக கருதப்படும் செந்தில் பாலாஜி, திமுக.வில் ஐக்கியமாக இருப்பதாக சில நாட்களாகவே தகவல்கள் பரவின. டிடிவி தினகரனோ, செந்தில் பாலாஜியோ இது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசாமல் தவிர்த்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கரூருக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். ஆனால் செந்தில் பாலாஜி தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வரவில்லை. திமுக.வில் இணையும் உறுதியான முடிவுக்கு செந்தில் பாலாஜி வந்துவிட்டார்.

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செந்தில் பாலாஜி திமுக.வில் இணைகிறார். இதையொட்டி கரூரில் இருந்து செந்தில் பாலாஜி ஆதரவு நிர்வாகிகள் பலரும் இன்றே தனி பஸ்ஸில் சென்னைக்கு புறப்பட்டனர்.

செந்தில் பாலாஜி, 2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக கொடிகட்டிப் பறந்தார். சசிகலா குடும்பத்தினரின் தீவிர ஆதரவு இவருக்கு இருந்தது பெரிய ரகசியம் அல்ல.

ஆனால் 2016-ல் ஆட்சி முடிகிற தருணத்தில் ஜெயலலிதாவுக்கு இவர் மீது அதிருப்தி இருந்தது. எனவே இவரை அரவக்குறிச்சி தொகுதியில் பலம் வாய்ந்த கே.சி.பழனிசாமியை எதிர்த்து போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. பின்னர் பணப் பட்டுவாடா புகார் காரணமாக அந்தத் தொகுதி தேர்தல் ரத்தானதும், இடைத்தேர்தலில் ஜெயித்து செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. ஆனதும் வரலாறு!

செந்தில் பாலாஜியின் உள்ளூர் எதிரியாக கருதப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அதே போக்குவரத்துத் துறையை வழங்கியதன் மூலமாக இவர் மீது ஜெயலலிதா எவ்வளவு கோபமாக இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா கை, அதிமுக.வில் ஓங்கியதும் செந்தில் பாலாஜிக்கு ஜாக்பாட் அடிக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சசிகலா சிறைக்கு சென்றதாலும், அதிகாரத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் கைப்பற்றியதாலும் செந்தில் பாலாஜிக்கு ஏற்றம் இல்லை.

எனினும் சசிகலா குடும்பத்திற்கு விசுவாசமாக டிடிவி தினகரன் தொடங்கிய அமமுக.வில் இருந்து வந்தார். மற்றவர்களைவிட இவரையே உரிமை அடிப்படையில் அதிகமாக டிடிவி தினகரன் செலவு செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கொங்கு மண்டலத்தை முழுமையாக இவர் பொறுப்பில் விடவும் டிடிவி தயாராக இல்லை.

இந்தச் சூழலில்தான் கொங்கு மண்டலத்தை வலுப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கும் திமுக தலைமையின் கண்ணில் செந்தில் பாலாஜி அதிருப்தியில் இருப்பதாக பட்டது. உடனே சென்னைக்கு வரவழைத்து மு.க.ஸ்டாலினே அவருக்கு சில வாக்குறுதிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக கரூர் மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதையடுத்தே கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு முன்னதாக, டிசம்பர் 14-ம் தேதி செந்தில் பாலாஜி திமுக.வில் இணைகிறார். டிடிவி தினகரன் கட்சியில் இருந்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சிலரையும் தன்னுடன் அழைத்துச் செல்ல செந்தில் பாலாஜி தீவிரமாக இருக்கிறார். அது நடக்குமா? என்பது இணைப்பு நிகழ்ச்சியின்போது தெரியும்.

செந்தில் பாலாஜி திமுக.வில் இணைவதை உறுதி செய்யும் வகையில் டிடிவி தினகரன் மறைமுகமாக செந்தில் பாலாஜியை தாக்கி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு செந்தில் பாலாஜி இணைகிறார் என்பது லேட்டஸ்ட் நிலவரம்!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Karur senthil balaji joins with dmk mk stalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X