கதிராமங்கலம் போராளிகள் மீது குண்டர் சட்டமா? மக்கள் புரட்சி வெடிக்கும் : ராமதாஸ் எச்சரிக்கை

மத்திய அரசுக்கு பணிந்து குண்டர் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பழிவாங்கத் துடித்தால் தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும்.

பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட கதிராமங்கலம் போராளிகள் 10 பேர் மீதும் குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இருந்தால், அதைக் கைவிட்டு உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் செயல்படுத்தப்படவிருக்கும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும், காவல்துறை அடக்குமுறையை கண்டித்தும் போராட்டங்களை நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்த செய்திகள் உண்மையாக இருந்தால் கண்டிக்கத்தக்கவை.

கதிராமங்கலத்திலிருந்து குத்தாலத்திற்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் எண்ணெய்க் குழாயில் கடந்த ஜுன் 30-ம் தேதி உடைப்பு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். ஆனால், தேவையே இல்லாமல், அந்த போராட்டத்தை மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் தான் தூண்டியதாகக் கூறி வழக்குத் தொடர்ந்த தமிழக அரசு அவர்களை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கதிராமங்கலம் வந்து மக்களுடன் பேச்சு நடத்திய மாவட்ட ஆட்சியர், கைதான 10 பேரும் ஜூன் 4-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவர் என்றும், அவர்களின் பிணை மனு விசாரணைக்கு வரும் போது அதை காவல்துறையினர் எதிர்க்க மாட்டார்கள் என்றும் உறுதியளித்திருந்தார். ஆனால், அவர்களின் பிணை மனு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அவர்கள் அனைவருக்கும் பிணை மறுக்கப்பட்டு விட்டது.

பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரும் நேற்று முன்நாள் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என்று நம்பிய மக்கள், அன்று மாலை மாவட்ட ஆட்சியருடன் பேச்சு நடத்த ஒப்புக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு பிணை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த கதிராமங்கலம் மக்கள், கைதான அனைவரையும் அரசு விடுதலை செய்யும் வரை பேச்சுக்களில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தனர்.

இத்தகைய சூழலில் தான், தங்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது மேலும் ஒரு வழக்கை காவல்துறை பதிவு செய்திருக்கிறது. போராளிகள் 10 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியாளர்கள் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காகவே புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் கதிராமங்கலத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுத்து சுமூகமான சூழலை ஏற்படுத்துவது தான் தமிழக அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.

கதிராமங்கலத்தில் இன்று காலை கூட எண்ணெய்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ள நிலையில், அதைப் போக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்தக் கடமையை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு உணர்ந்திருந்தால், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று கதிராமங்கலத்தில் பதற்றத்தை தணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால், மக்கள் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசு, இப்போது தங்களின் புதிய எஜமானரான மத்திய அரசின் உத்தரவுகளை தாழ்பணிந்து செயல்படுத்துவதில் மட்டும் தான் ஆர்வம் காட்டுகிறது.

மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்கி, வளம் கொழிக்கும் காவிரிப் பாசனப் பகுதிகளை பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்தைத் தான் பினாமி அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த தமிழகத்தையும் காட்டிக் கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு துணிந்து விட்டது. இதுவரை அடிமை அரசாகவும், பினாமி அரசாகவும் இருந்த நிலை மாறி இப்போது கதிராமங்கலம் விஷயத்தில் துரோக அரசாக உருவெடுத்துள்ளது.

தமிழக மக்களின் நலன் காப்பது தான் ஆட்சியாளர்களின் கடமை என்பதை எடப்பாடி தலைமையிலான அரசு உணர வேண்டும். பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட கதிராமங்கலம் போராளிகள் 10 பேர் மீதும் குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இருந்தால், அதைக் கைவிட்டு உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

மாறாக, மத்திய அரசின் அழுத்தத்திற்கு பணிந்து அவர்கள் மீது புதுப்புது வழக்குகளை பதிவு செய்து, குண்டர் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பழிவாங்கத் துடித்தால் தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும். உரிமைக்காகவும், தாய்க்கு இணையான விளைநிலங்களையும் பாதுகாக்க போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close