மீண்டும் வைரமுத்து : ‘தமிழாற்றுப் படை’யை தொடர்கிறார்

ஆண்டாள் சர்ச்சைக்கு பிறகு அமைதியாகியிருந்த வைரமுத்து, மீண்டும் தமிழாற்றுப் படையை தொடர்கிறார். 13-ம் தேதி மறைமலையடிகள் குறித்து பேசுகிறார்.

ஆண்டாள் சர்ச்சைக்கு பிறகு அமைதியாகியிருந்த வைரமுத்து, மீண்டும் தமிழாற்றுப் படையை தொடர்கிறார். 13-ம் தேதி மறைமலையடிகள் குறித்து பேசுகிறார்.

Kavignar Vairamuthu, Tamilattupadai, Maraimalaiadigal

வைரமுத்து, பிப்ரவரி 13-ம் தேதி மறைமலையடிகள் குறித்து பேசுகிறார்.

கவிஞர் வைரமுத்து, தமிழுக்கு தொண்டாற்றிய மூதறிஞர்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து உரையாற்றி வருகிறார். இந்த உரைத் தொடருக்கு, ‘தமிழாற்றுப் படை’ என பெயர் சூட்டியிருக்கிறார்.

ஆண்டாள் குறித்து, ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ராஜபாளையத்தில் அவர் ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தினார். இந்து அமைப்பினரும், ஜீயர்களும் வைரமுத்துவைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

வைரமுத்துவுக்கு ஆதரவாக திராவிட இயக்கத்தினர் மற்றும் சில அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கட்டுரை தினமணி நாளிதழில் வெளியானது. அதற்காக அந்த நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதிக்கு சென்று மன்னிப்பு கோரினார். ஆனால் ஜீயர் கெடு விதித்தும்கூட வைரமுத்து நேரில் சென்று மன்னிப்பு கேட்கவில்லை.

ஆண்டாள் சர்ச்சை உச்சத்தில் இருந்தபோது, ‘இவர்களுக்கு மத்தியில் தமிழ்த் தொண்டு செய்யப் போகிறேனா?’ என வைரமுத்து கூறினார். ஆனாலும் சிறிது அவகாசம் எடுத்துக்கொண்டு, மீண்டும் தமிழாற்றுப் படையை தொடர்கிறார் வைரமுத்து.

பிப்ரவரி 13-ம் தேதி (செவ்வாய்) மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தனது தமிழாற்றுப் படையின் அடுத்த படைப்பாக ‘மறைமலையடிகள்’ குறித்து கட்டுரை ஆற்ற இருக்கிறார் வைரமுத்து. இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

தமிழாற்றுப் படையின் முந்தைய நிகழ்ச்சிகளை கவிஞர் வைரமுத்து நிறுவிய வெற்றித் தமிழர் பேரவையுடன் தினமணியும் இணைந்து நடத்தியது. ஆனால் மறைமலையடிகள் குறித்த உரையை வெற்றித் தமிழர் பேரவை ஏற்பாட்டிலேயே வாசித்து அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 

×Close
×Close