தரமில்லா உணவு: காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

இரவு உணவு உட்கொண்டதை யடுத்து, காயிதே மில்லத் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரவு உணவு உட்கொண்டதை யடுத்து, காயிதே மில்லத் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் காயிதேமில்லத் அரசு பெண்கள் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவிகள் தங்கி படிக்க கல்லூரி வளாகத்திலேயே விடுதி உள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கென உணவகம் கல்லூரி விடுதியிலேயே இயங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அங்கு மாணவிகளுக்கு இட்லியுடன் பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மாணவிகளுக்கு திடீர் வயிற்றுபோக்கும் வாந்தியும் ஏற்பட்டுள்ளது. சில மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.

அதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மாணவிகள் 48 பேர் ராயப்பேட்டை மருத்துவமனையிலும், மாணவிகள் 41 பேர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, கல்லூரி விடுதிக்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், விடுதி மாணவிகளுக்கு பரிமாறப்பட்ட உணவை ஆய்வு செய்து, உணவு மாதிரிகளை எடுத்து சென்றுள்ளனர். அதேபோல், பாதிக்கப்பட்ட மாணவிகளின் ரத்த மாதிரிகளையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

காயிதே மில்லத் கல்லூரி விடுதிக்கு உணவு ஒப்பந்ததாரராக இருப்பவரின் ஒப்பந்த காலம் 2 மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில், தற்போதும் அவரே உணவு சப்ளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

மாணவிகளில் பலர் குணமடைந்துவிட்ட நிலையில், உள்நோயாளிகளாக மாணவிகள் சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உணவு சாப்பிட்டாதால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தரமான உணவு வழங்க வேண்டும் எனவும் கல்லூரி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

×Close
×Close