முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் ஜாமீன் மனு: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகன், தாக்கல் செய்த ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்நியச் செலவாணி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகன், தாக்கல் செய்த ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மண்ணடியில் “கேலக்ஸி” என்ற பெயரில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த லியாகத் அலி என்பவர் இதை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் போலி நிறுவனங்கள் மூலம் பணப்பரிமாற்றம் செய்தவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், லியாகத் அலி அலுவலகத்தில் சோதனை நடத்தியதில், வெளிநாடுகளில் இருந்து மின்னணுப் பொருட்களை இறக்குமதி செய்ததாகவும், மேலும் சில பொருட்களை ஏற்றுமதி செய்ததாகவும் வங்கியில் கணக்கு காட்டப்பட்டதற்கான ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர். அவரது வங்கிக் கணக்கை ஆராய்ந்தபோது ரூ.8 கோடி இருந்ததும் சோதனையின் போது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், லியாகத் அலி எந்த பொருட்களையுமே ஏற்றுமதி, இறக்குமதி செய்யவில்லை என்பதும், அப்படி செய்தது போல போலியாக ஆவணங்களை தயாரித்து ஹவாலா பணப் பரிமாற்றம் செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், இதேபோல 8 போலி நிறுவனங்கள் தொடங்கி, 8 வங்கிகள் மூலம் சுமார் ரூ.80 கோடி பணப்பரிமாற்றம் செய்ததை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் லியாகத் அலியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகனுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர் மூலமாக போலி நிறுவனங்கள் மற்றும் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து அன்பழகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமின் கோரி அன்பழகன் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில் இந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீதிமன்ற விதிக்கும் நிபந்தனைகள் ஏற்க தயாராக உள்ளேன். எனவே ஜாமின் வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபா தேவி, மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்க துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close