Advertisment

அடுத்தடுத்து கொலை, கொள்ளை… ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாட்டில் நடந்தது என்ன?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாட்டில் என்ன நடந்தது என்று மீண்டும் ஒரு மறுபார்வை பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jayalalitha Kodanad estate, Kodanad murder case, Kodanad murder and robery case full details, கொடநாடு கொலை வழக்கு, கொடநாடு கொள்ளை வழக்கு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாட்டில் நடந்தது என்ன, எடப்பாடி பழனிசாமி, அதிமுக, திமுக, Edappadi K Palaniswami, Tamil nadu govt, DMK, AIADMK, DMK govt, kodanad, Sasikala

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன் என்பவர் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னுடைய பெயரைச் சேர்க்க முயற்சித்து வருகின்றனர் என்று கூறி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயலைக் கிளப்பியுள்ளார். திமுக அரசின் இந்த நகர்வுக்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதிமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இது தமிழக அரசியலில் அனல் பறக்க வைத்துள்ளது.

Advertisment

இதனால், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவருடைய கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. அந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள சயன் அளித்த ரகசிய வாக்குமூலத்தில்தான் எடப்பாடி பழனிசாமியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக, கடந்த ஜூலை 20ம் தேதி, அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பைர் சுவாமிநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள்…. ஆதாரங்களுடன் அனைத்தர்கும் அதிர வைக்கும் விடைகள்….. Game Over Bro….” என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து ஊடகங்களில் 2 நாட்கள் விவாதித்த பிறகு, அடுத்த சம்பவத்துக்கு சென்றுவிட்டார்கள். ஆனால், இப்போது, அஸ்பயர் சுவாமிநாதன் குறிப்பிட்டது போலவே, கொடநாடு கொலை வழக்கில், “கொடநாடு வழக்கில் சிலரின் ரகசிய வாக்குமூலத்தில் என்னுடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதே போல், இன்னும் சில அதிமுக நிர்வாகிகளின் பெயர்களையும் அதில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாட்டில் என்ன நடந்தது என்று மீண்டும் ஒரு மறுபார்வை பார்ப்போம்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக டிசமபர் 5, 2016ல் காலமானார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். ஆனால், நிழல் அரசியல் செய்து வந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற முயற்சி செய்தார். ஓ.பி.எஸ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் தர்ம யுத்தம் தொடங்கி அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ஒரு கிளர்ச்சிக் குழுவை உருவாக்கினார்.

இதையடுத்து, கூவத்தூர் சம்பத்தின்போது, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இது சசிகலாவின் முதலமைச்சர் கனவைத் தகர்த்தது. தனது ஆதரவாளராக இருந்த பழனிசாமியை முதலமைச்சராக்கிவிட்டு சிறை சென்றார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி விரைவிலேயே ஓ.பி.எஸ்-ஐ இணைத்துக்கொண்டார். சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து வெளியேற்றினார். மீதம் இருந்த 4 ஆண்டு கால ஆட்சியையும் முதலமைச்சராக வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

முதலமைச்சராக இருந்தபோதுதான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

கொடநாடு எஸ்டேட்டில் ஏப்ரல் 23, 2017ல் 40 வயதான பாதுகாப்புக் காவலர் ஓம் பகதூர் வாயில் துணி அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். பின்னர், அவருடன் வேலை செய்த கிருஷ்ண பகதூருக்கும் கடுமையான காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். இது ஒரு கொள்ளை முயற்சி என்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பிறகு, கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிந்த 24 வயது இளைஞர் தினேஷ்குமார் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக கே.வி.சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகப்பட்டனர். பின்னர், கனகராஜ் ஒரு கார் விபத்தில் இறந்தார். சயானும் ஒரு கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். ஆனால், அந்த விபத்தில் அவருடைய மகளும் மனைவியும் உயிரிழந்தனர். அதே நேரத்தில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை போலீசாரால் மீட்க முடியவில்லை. கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

கடந்த ஆண்டு, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட சயான் மற்றும் வாலையார் மனோஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்த சம்பவத்தில் அதிகாரத்தில் உள்ள உயர் மட்ட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் உண்மையை வெளிப்படுத்த அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சயானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த சூழலில்தான், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் அதில் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அஸ்பயர் சுவாமிநாதன் ஆகஸ் 17ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொடநாடு வழக்கில் புதிய திருப்பம். 3 புதிய சாட்சிகள். 2 பேர் ஒப்புக்கொண்டு அப்ரூவராக மாறியிருக்கிறார்கள், இப்போது 17 புதிய ஆவணங்கள் கிடைத்திருக்கிறது. இறுதி கட்டத்தை நெறுங்கிவிட்டது.” என்று வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு இப்படி புதிய திருப்பங்களை சந்தித்திருப்பதோடு தமிழக அரசியலில் புயலையும் கிளப்பியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Aiadmk Jayalalithaa Edappadi K Palaniswami Kodanad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment