கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை; டிஸ்சார்ஜ் ஆன பத்து நிமிடத்தில் போலீஸ் விறுவிறு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர்(50), கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இதையடுத்து, கொலையாளிகளை கண்டுபிடிக்க, ஐந்து டிஎஸ்பிக்கள் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. மூன்று பேரை போலீசார் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த படுகொலைச் சம்பவம் நடந்த அன்று பதிவான சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, ஜெயலலிதாவிடம் கடந்த 2012-ஆம் ஆண்டு கார் டிரைவராக வேலைப்பார்த்த கனகராஜ் என்பவர் மீது, போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடிபாளையத்தில், கடந்த ஏப்ரம் 29-ஆம் தேதி காலை நடந்த விபத்தில் சிக்கி, போலீசாரால் தேடப்பட்டு வந்த ஓட்டுநர் கனகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கனகராஜின் இந்த விபத்து போலீசாருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் உண்மையில், விபத்தில் தான் இறந்தாரா அல்லது விபத்து எனும் போர்வையில் கொலை செய்யப்பட்டுள்ளாரா எனும் கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது காவல்துறை சற்றும் எதிர்பார்க்காத விதமாக, இறந்துபோன ஓட்டுநர் கனகராஜின் நண்பரும், கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த சயான் என்பவர், அதே நாளில் தனது குடும்பத்துடன் பாலக்காட்டில் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் சயானின் மனைவியும், மகளும் இறந்தனர்.

சயான், படுகாயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சயான் இன்று டிஸ்சார்ஜ் ஆன அடுத்த பத்து நிமிடத்தில், தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கோத்தகிரி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

×Close
×Close