கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கோவை காந்திபுரம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில், அ.தி.மு.க வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. கோடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். பங்களாவில் இருந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக 12 நபர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை, உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் இதுவரை 100 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சயான் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி சென்ற போது, கூடலூர் அருகே வாகன சோதனையின் பிடிபட்டனர். கேரளா தப்பி சென்ற அவர்களை போலீசார் பிடித்த போது, கூடலூரை சேர்ந்த சஜீவன் அவர்களை விடுவிக்குமாறு தொலைபேசியில் தெரிவித்தாக கூறப்படுகிறது.
சஜீவன் கோடநாடு பங்களாவில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு அவர்களின் விருப்பத்தின் பேரில்,பங்களாவில்
மர வேலைகள் செய்து வந்தவர். இதன் மூலம் அவர்களுக்கு நெருக்கமான நபராக அதிமுகவில் வலம்வந்தார்.கடந்த ஆண்டு அவருக்கு அதிமுக வர்த்தக அணி மாநில தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலிசார், சயான் மற்றும் அவரது கூட்டாளிகளை விடுவிக்க சொன்னது குறித்து விசாரணைக்கு நவம்பர் 5-ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அளித்தனர். ஆனால், அவர் ஆஜராகாத நிலையில், மீண்டும் சஜீவனுக்கு சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து இன்று சஜீவன் கோவை காந்திபுரம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“