Advertisment

கொள்ளிடம் கடலில் கலக்கும் பகுதி வெள்ளக்காடானது; ஊரைவிட்டு பொதுமக்கள் வெளியேற்றம்

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால், கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக ஆற்றின் நடுவே உள்ள வெள்ளமணல், முதலைமேடு திட்டு, சந்தப்படுகை, நாதல்படுகை உள்ளிட்ட கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kollidam river flood, village people evacuated, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு, கிராம மக்கள் வெளியேற்றம்

க.சண்முகவடிவேல்

Advertisment

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அதன் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து எட்டியுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூரிலிருந்து அப்படியே உபரி நீர் வெளியேற்றப்படுகின்றது.

மேட்டூரிலிருந்து வெளியேற்றப்படும் 2 லட்சம் கன அடி நீர் திருச்சி முக்கொம்பு வந்து அங்கிருந்து கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, சந்தப்படுகை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மேட்டூரில் திறந்து விடப்படும் 2 லட்சம் கன அடி நீரும் முக்கொம்புவில் இருந்து கொள்ளிடத்தில் திருப்பிவிடப்பட்டு கடலுக்கு அனுப்பப்படுகிறது. கொள்ளிடம் ஆறு மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.

publive-image

இன்று மதியம் நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடி நீர் சென்றுக்கொண்டிருக்கிறது. படிப்படியாக தண்ணீரின் அளவு அதிகரிக்கக் கூடும் என்பதால் கொள்ளிடம் ஆற்றின் முத்து பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

publive-image

கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக ஆற்றின் நடுவே வெள்ளமணல், முதலைமேடு திட்டு, சந்தப்படுகை, நாதல்படுகை உட்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் அந்த கிராமங்களை முற்றிலுமாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

publive-image

இந்த நிலையில் கொள்ளிடத்தை அடுத்த நாதல்படுகை கிராமம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனை அடுத்து, அப்பகுதி மக்களை படகுகள் மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் அப்பகுதி மக்களில் பலர் ஆபத்தை உணராமல் குழந்தை, முதிவர்களுடன் கிராமத்தில் இருந்து வெளியேறாமல் கிராமத்தின் உள்ளேயே தங்கி உள்ளனர். பாதுகாப்பான பகுதிக்கு வராமல் தங்கியுள்ள ஒரு சிலருக்கு அவ்வப்போது திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து அவசரகதியில் அங்கிருந்து தீயணைப்பு மீட்பு படையினரும், காவல்துறையினரிடம் இணைந்து அவர்களை மீட்டு கரை சேர்த்து வருகின்றனர்.

அந்த கிராமங்களில் உள்ளவர்களை வெளியேறுமாறு தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் எச்சரித்து வருகின்றனர். எனினும் பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் பெண்கள் குழந்தைகளை மட்டும் வெளியேற்றிவிட்டு ஆண்கள் அங்கேயே தங்கியிருக்கின்றனர். அவர்களையும் வெளியேறுமாறு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

publive-image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக கொள்ளிடம் ஆற்றின் கரை பலவீனமாக இருக்கும் அளக்குடி, குமாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அவ்வபோது ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தமிழக சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில் வந்து நிலைமையை ஆய்வு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

கொள்ளிடத்தில் வரலாறு காணாதவாறு ஒரே நேரத்தில் 2 லட்சம் கனஅடிக்கும்மேல் தண்ணீர் ஆர்ப்பரிப்பதால் கொள்ளிடம் கடலில் கலக்கும் கடைமடை பகுதி கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட வெண்டை, கத்திரிக்காய், சோளம், முல்லை பூ உள்ளிட்ட பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment