கோவன் மீண்டும் கைது : பாடலில் மோடியை தாக்கியதால் நடவடிக்கை

கோவன் தனது சர்ச்சை பாடலுக்காக மீண்டும் ஒரு முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். ராமராஜ்ய ரத யாத்திரை மற்றும் மோடியை தாக்கிப் பாடியதற்காக இந்த நடவடிக்கை!

கோவன் தனது சர்ச்சை பாடலுக்காக மீண்டும் ஒரு முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். ராமராஜ்ய ரத யாத்திரை மற்றும் மோடியை தாக்கிப் பாடியதற்காக இந்த நடவடிக்கை!

கோவன், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர்! பல்வேறு பிரச்சனைகளுக்கு தனது பாடல் மூலம் குரல் கொடுத்து வருகிறார். இரு ஆண்டுகளுக்கு முன்பு மதுவுக்கு எதிராக அவர் பாடிய பாடலுக்கு அவரை போலீஸார் கைது செய்தனர். அப்போது கோவனை விடுதலை செய்யக்கோரி பலரும் குரல் கொடுத்தனர். பிறகு ஜாமீனில் அவர் வெளிவந்தார்.

கோவன், தற்போது மீண்டும் சர்ச்சை பாடலுக்காக கைதாகியிருக்கிறார். திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு கடந்த மாதம் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை கண்டித்து கோவன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாகவும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் கவுதம் புகார் மனு ஒன்றை போலீசில் அளித்தார்.

அதன்பேரில் பாடகர் கோவன் உள்ளிட்ட சிலர் மீது கண்டோன்மென்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இப்ராகிம் வழக்குப்பதிவு செய்தார். இந்தநிலையில் நேற்று கோவனை போலீசார் கைது செய்தனர்.

கோவனை கைது செய்தபோது அவரது வீட்டுக் கதவை உடைத்து போலீஸார் கைது செய்தனர். அவரை அங்கிருந்து அழைத்துச் செல்ல முடியாதபடி அப்பகுதியை சேர்ந்த சிலர் சாலையில் டூ வீலர்களை தள்ளிவிட்டனர். ஆனால் போலீஸார் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு கோவனை அழைத்துச் சென்றனர். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close