'தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்'! - கே எஸ் அழகிரி

தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாகக் கண்டிக்கிறேன்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் அனைத்தும் தேர்தல் தேதி அறிவிப்பிற்காக காத்திருக்கின்றன. அதனை அறிவிக்கும் பட்சத்தில், புயல் வேகத்தில் கூட்டணி இணைப்பு, தொகுதி பங்கீடு என்று பணிகள் முடுக்கிவிடப்படும். இருப்பினும், இப்போதே பெரும்பாலான கட்சிகள் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளன. இதில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை இணைக்க காங்கிரஸ் விரும்பியது. ‘காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சமீபத்தில் கூறியிருந்தார்.

மேலும் படிக்க – கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு: அதிர்ச்சியில் திமுக

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ‘திமுக, அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்கப் போவதில்லை. மக்களுக்கு நல்லதை பரிமாற புறப்பட்டு இருக்கிறோம். அவசர கைக்குலுக்குகளால் எங்கள் கையில் கறை படிந்துவிடக் கூடாது. எங்கள் கை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அமமுகவுடனும் நாங்கள் கூட்டணி வைக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க – ‘திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை’! – சலசலப்பை ஏற்படுத்திய கமல்ஹாசன் அறிவிப்பு

திமுகவை விமர்சித்த கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கேஎஸ் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும்போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது என் கவனத்திற்கு வரவில்லை.

அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுக மீதான விமர்சனம் தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குதான் உதவும். எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணிதான் முடிவு செய்யும்” என தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close