கும்பகோணம் கோவிலில் தீ : மகா சிவராத்திரி விழாவில் பரபரப்பு

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி கியாஸ் சிலிண்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி கியாஸ் சிலிண்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் சிவாலயங்களில் நேற்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலிலும் விழா நடந்தது. இதையொட்டி அங்கு பக்தர்கள் குவிந்தனர்.

ஆதிகும்பேஸ்வரருக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நாட்டியாஞ்சலி விழாவும் நடைபெற்றது. நாட்டியாஞ்சலி விழா மேடை அருகே சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர்.

சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு இரவு நேரத்தில் வரும் பக்தர்களுக்கு ஒரு தனியார் அமைப்பு சார்பில் பால் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பால் வழங்க ஆதிகும்பேஸ்வரர் கோவில் கொடி மரம் அருகே கியாஸ் சிலிண்டரை வைத்து பால் காய்ச்சிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் உள்ள ரப்பர் குழாயில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கூச்சலிட்டனர்.
தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கோவிலில் உள்ள மூலவர் மற்றும் அம்மன் சன்னதியில் இருந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடிவந்தனர். கோவிலின் வெளியில் இருந்த பக்தர்களும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்தவர்களும் ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் திரண்டதால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி நசுங்கினர்.

பக்தர்களுக்கிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே கியாஸ் சிலிண்டரில் பிடித்த தீ காற்றின் வேகம் காரணமாக மேலும் வேகம் எடுத்து எரிய தொடங்கியது. கியாஸ் சிலிண்டரில் தீ வேகமாக எரிவதை கண்ட கோவில் செயல் அலுவலர் கவிதா, திடீரென மயக்கமடைந்தார். அவரை அருகில் இருந்த கோவில் ஊழியர்கள் மீட்டு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

நாட்டியாஞ்சலி தொடக்க விழாவுக்கு வந்த நீதிபதியின் பாதுகாவலர் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் கோவில் ஊழியர் சிவாஜி ஆகிய இருவரும் சாதுர்யமாக செயல்பட்டு அருகே கிடந்த ஒரு கனமான சாக்கை எடுத்து தண்ணீரில் நனைத்து வேகமாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கியாஸ் சிலிண்டர் மீது போர்த்தி தீயை அணைத்தனர்.

இதனால் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி பெரிய அளவில் நிகழ இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் கியாஸ் சிலிண்டரில் இருந்த குழாயை துண்டித்து சிலிண்டரை முழுவதுமாக தண்ணீரில் நனைத்தனர்.

பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிவராத்திரியன்று நடந்த இந்த சம்பவத்தால் பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் அண்மையில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். கடந்த 2-ந் தேதி இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. அடுத்து, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் தலவிருட்சமான ஆலமரத்தில் கடந்த 7-ந் தேதி இரவு தீப்பிடித்து எரிந்தது. கோவில்களில் அடுத்தடுத்து நடைபெறும் இந்த சம்பவங்களால் ஆன்மிக அன்பர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

 

×Close
×Close