தமிழக பாஜக தலைவரான 2வது தலித்; எல்.முருகன் நியமனம் முழு பின்னணி

தமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக இருந்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணை தலைவராக இருந்த எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு 2வது தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

By: Updated: March 11, 2020, 10:55:45 PM

தமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக இருந்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணை தலைவராக இருந்த எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு 2வது தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பாஜகவை ஊடகங்களில் தினமும் அரசியல் விவாதங்களின் மையமாக்கி செயல்பட்டவர் தமிழிசை சௌந்தரராஜன். மத்திய அரசு தமிழிசை சௌந்தரராஜனை தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்ததைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவி சுமார் 6 மாதங்களுக்கு காலியாகவே இருந்து வந்தது. கடந்த டிசம்பர் மாதமே தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டாலும் அறிவிப்பு வெளியாகவில்லை.

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அக்கட்சியின் தமிழகத் தலைவர்கள் இடையே கடுமையான போட்டி இருந்தது. பாஜக தேசிய செயலாளராக இருக்கும் ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், ஆகியோரின் பெயர்கள் ரேஸில் இருந்தன.

இந்த ஆறு மாத காலத்தில் தமிழக பாஜக தலைவர் யார் அறிவிக்கப்படுவார் என்று பல யூகங்கள் வெளியாகியது. ஆனால், எல்லா யூகங்களையும் புறம் தள்ளிவிட்டு பாஜக தேசியத் தலைமை, தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகனை தமிழக பாஜக தலைவராக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக பாஜகவின் தலைவராகும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 2வது தலைவர் என்று பாஜக வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

பாஜகவில் மாநில தலைவர் பதவி என்பது மாநிலத்தில் கட்சியில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர். அதனால், பாஜகவில் முக்கியமான பதவி. இப்படி முக்கியமான பதவிக்கு தலித் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து பாஜக வட்டாரத்தினர் கூறுகையில், “பொதுவாக தமிழக அரசியலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகளில் இத்தனை ஆண்டு கால வரலாற்றில் கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள பதவிகளை தலித்களுக்கு வழங்கியதில்லை. காங்கிரஸ் கட்சியில்கூட எல்.இளையபெருமாள் தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

திமுகவில் ஆ.ராசா போன்றவர்களை மத்திய அமைச்சராக்கியுள்ளார்கல் என்றாலும் கட்சியில் அதிகாரமுள்ள முக்கிய பதவிகளை வழங்கியதில்லை. அதே போல, கல்வி வேலைவாய்ப்புகளில் 18 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுள்ள தலித் மக்கள் சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி 2 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அதிமுக தனபாலுக்கு சபாநாயர் பதவி அளித்து இருந்தாலும் கட்சி பொறுப்புகளில் தலித்துகளுக்கு மிக முக்கிய பொறுப்பு இன்னும் அளிக்கப்படவில்லை.

தமிழக மக்கள் தொகையில் 20%-க்கு மேல் உள்ள தலித்  சமூகத்தில் இருந்து ஒருவருக்கு தமிழக அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் அதிகாரம் மிக்க பதவி இதுவரை அளிக்கப்படவில்லை. இதனை உணர்ந்துகொண்ட பாஜக தேசியத் தலைமை தலித் மக்களை பாஜகவை நோக்கி ஈர்க்க தலித் ஒருவரை தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்து அறிவித்துள்ளது. தலித் ஒருவர் மாநில தலைவராக நியமனம் செய்வது பாஜகவில் ஒன்றும் புதுசு இல்லை. ஏற்கெனவே டாக்டர் கிருபாநிதி தமிழக பாஜக தலைவராக இருந்துள்ளார். இப்போது 2வது முறையாக தலித் ஒருவர் பாஜக தலைவாராகியிருக்கிறார்.  திமுக, அதிமுக, காங்கிரஸ் என பல கட்சிகளுக்கும் முன்னுதாரணமாக பாஜக எல்.முருகனை தலைவராக அறிவித்துள்ளது. எல்.முருகன் தலைமையில் தமிழக பாஜக புதிய பலம் பெற்று உயரும் என்று பாஜக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.முருகன், 15 ஆண்டுகளாக எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எல். படித்தவர். அதுமட்டுமல்லாமல், அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் சட்ட ஆய்வுகள் துறையில் மனித உரிமைகள் தொடர்பாக பி.எச்டி முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறார்.

தான் தமிழக மாநில பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து ஊடகங்களிடம் பேசிய எல்.முருகன், “தொண்டரோடு தொண்டராக இருந்து கட்சியை வளர்க்க பாடுபடுவேன், வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கட்சியை பலப்படுத்துவேன்” என்று கூறினார்.

தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள எல்.முருகனுக்கு தமிழக முதல்வர் பழனிசாம், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:L murugan appointed bjp tamil nadu state president

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X