Advertisment

இல்லத்தில் இருந்து கொண்டாடுவோம்; தலைவர்கள் பொங்கல் வாழ்த்து!

தைத் திருநாள் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் - உழவர் உயிர்நாள் - திருவள்ளுவர் வாழ்வியல் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Leaders Pongal wishes to people, Pongal wishes, governor RN Ravi Pongal wishes, CM MK Stalin Pongal wishes, OPS EPS Pongal wishes, தலைவர்கள் பொங்கல் வாழ்த்து, இல்லத்தில் இருந்து கொண்டாடுவோம் , முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் ஆர் என் ரவி, அதிமுக, ஓபிஎஸ் இபிஎஸ், திருமாவளவன், ராமதாஸ், சிபிஐ, சிபிஎம், பொங்கல் வாழ்த்து, பொங்கல் பண்டிகை, AIADMK, OPS, EPS, Thirumavalavan, Ramadoss, CPI, CPM, pongal festival, pongal 2022

தமிழர்கள் கொண்டாடும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் - உழவர் உயிர்நாள் - திருவள்ளுவர் வாழ்வியல் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்று காரணமாக அனைவரும் இல்லத்தில் இருந்தபடியே கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Advertisment

தமிழர்கள் கொண்டாடும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைசர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை நிரப்பட்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: “தமிழ் சகோதர- சகோதரிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

பொங்கல் பண்டிகை என்பது அறுவடை திருநாளில் கொண்டாட்டம் ஆகும். இந்த நன்நாளில் நமக்கு வாழ்வு, ஆற்றல் மற்றும் உயிர்ச்சக்தியை வழங்கிய சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். ‘தை’ மாதத்தின் தொடக்கத்தில் கடவுளின் ஆசீர்வாதத்திற்காக நாம் பிரார்த்தனைகளைச் செய்கிறோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், கட்ச் முதல் கம்ரூப் வரையிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்நாளில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இவை அனைத்தும் பாரதத்தின் பகிரப்பட்ட ஆன்மிக கலாசாரத்தில் வேரூன்றியிருந்தாலும் – நம் மக்களின் வளமான பன்முகத்தன்மைக்கு அடிப்படையான உள்ளார்ந்த ஒருமையை பிரதிபலிக்கிறது. இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை நிரப்பட்டும்.

தமிழ்நாட்டு சகோதர சகோதரிகள் கோவிட் விதிமுறைகளை கடைப்பிடித்து பொங்கல் கொண்டாட கேட்டுக்கொள்கிறேன்.” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இல்லத்தில் இருந்தபடியே பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “பொங்கலோ பொங்கல் என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது. உள்ளமெல்லாம் பூரிப்பு பிறக்கிறது. அந்த வகையில் நம் ஊனோடு, உயிரோடு, உணர்வோடு கலந்த விழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. தை முதல் நாள் தமிழர் திருநாள், தை இரண்டாம் நாள் வான்புகழ் கொண்ட திருவள்ளுவர் நாள் எனத் தைத்திங்களின் தொடக்கம் என்பது தமிழர் பெருவிழா நாள்களாக அமைந்துள்ளது.

புத்தாடை அணிந்து, புதுப்பானையில், புத்தரிசி படைத்து பொங்கல் இடும் நாள் என்பது தமிழர்கள் இல்லமே பொங்கி வழியும் நாளாக அமைந்து வருகிறது. வேளாண்மையைத் தொழிலாக இல்லாமல், பண்பாடாகக் கடைப்பிடிக்கும் இனம் தமிழினம். உழவே தலை என்றார் வள்ளுவர். அத்தகைய உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு என்றும் துணையாக இருக்கும் உயிர்ச் செல்வங்களாம் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் அதனைக் கடைப்பிடித்து வருகிறோம். அந்தவகையில் எல்லாம் அடங்கிய இனிய திருநாள்தான் பொங்கல் திருநாள்.

அதிலும் இந்த ஆண்டு புத்தாட்சி மலர்ந்த ஆண்டாக அமைந்திருப்பதால் - மக்கள் மனதில் அரசியல் பூரிப்பும் இணைந்துள்ளது. உங்களில் ஒருவனான நான், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர வைக்கப்பட்டுள்ளேன்.

பொறுப்பேற்ற நொடியில் இருந்து உங்களுக்காகவே ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்து வருகிறேன். மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி என உழைத்து வருகிறேன். எட்டே மாதத்தில் ஏற்றமிகு திட்டங்களைத் தீட்டி வருகிறேன். ஐந்தாண்டு செய்ய வேண்டிய சாதனைகளைச் சில மாதங்களில் செய்தவன் என்று நடுநிலையாளர்கள் பாராட்டைப் பெற்றும் வருகிறேன். இத்தகைய பொற்கால ஆட்சியின் முதல் தைத்திருநாளைத்தான் உங்களோடு சேர்ந்து நானும் கொண்டாட இருக்கிறேன்.

கொரோனா காலம் என்பதால் கட்டுப்பாட்டுடன் நாம் இந்த விழாவைக் கொண்டாட வேண்டும். இல்லத்தில் இருந்தபடியே கொண்டாடுங்கள். பொது இடங்களில் கூட வேண்டாம். இந்த அலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம். அதுவரை உங்களையும் காத்து, நாட்டையும் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அனைவருக்கும் தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் - உழவர் உயிர்நாள் - திருவள்ளுவர் வாழ்வியல் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வணங்குவோம் சூரியனை!

வாழ்த்துவோம் உழவரை!

மண் செழிக்கட்டும்!

மக்கள் மகிழட்டும்!” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் பொங்கல் வாழ்த்து

மனத்தூய்மை, அச்சமின்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், புதுப்பானையில் உள்ள நற்பொங்கல் போன்று நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும், வளமும் பெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; “உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், புதுமை பொங்க, இனிமை தங்க, செல்வம் பெருக, வளமை வளர, அனைவருக்கும் எங்களது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

போகிப் பண்டிகை, தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என 4 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும்.

தை முதல் நாளன்று புதுப்பானையில் அரிசியிட்டு ‘‘பொங்கலோ பொங்கல்’’ என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பி, இறைவனை வணங்கி அனைவரும் ஒன்றுபட்டு, வேற்றுமைகளை மறந்து உள்ள மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். மனத்தூய்மை, அச்சமின்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், புதுப்பானையில் உள்ள நற்பொங்கல் போன்று நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும், வளமும் பெறும்.

பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள். இத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட அம்மாவும், அதனைத் தொடர்ந்து அம்மாவின் அரசும் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி, சீரிய முறையில் செயல்படுத்தின என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர விரும்புகிறோம்.

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும். நலமும் வளமும் பெருகட்டும். அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும், கடினமாக உழைத்து வரும் நம் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தைக் கொண்டு வந்து சேர்க்கட்டும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, எங்களுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

தமிழர்களின் உழவையும், உழைப்பையும் போற்றும் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் உழவையும், உழைப்பையும் போற்றும் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளுக்கேற்ப தமிழர்களின் பெருமைமிகு தனிச்சிறப்புகளில் ஒன்று தான் தைப்பொங்கல் திருநாள் ஆகும். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி, மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. தமிழ்நாடு இப்போதும் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது. சமூக நீதி, கல்வி, வேளாண்மை, வேலைவாய்ப்பு தொடர்பான நமது கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. தமிழ்ச் சொந்தங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்; அதற்காக நாம் சிந்திய வியர்வை ஒரு போதும் வீண் போகாது என்பதை தை பிறந்ததும் வரப்போகும் செய்திகள் அனைவருக்கும் உணர்த்தும்; நமது நம்பிக்கைகள் வெல்லும்.

தமிழர்களின் தனிச்சிறப்புகளில் ஒன்று அனைவரும் நலமாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என்று நினைப்பதும், வேண்டுவதும் தான். தைத் திங்கள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டின் வேண்டுதலும் அதுவாகத் தான் இருக்க முடியும். அதன்படியே அனைத்துத் தரப்பினரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைப்பொங்கல் திருநாளும், தமிழ்ப்புத்தாண்டும் அனைத்து நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி

பொங்கல் பெருவிழா என்பது மதசார்பற்ற மகத்தான விழா, தமிழர் பாரம்பரியக் கூறுகளைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வோடு கொண்டாடுவோம்; தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இனிய பொங்கல் வாழ்த்துகள் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “தலைமுறை தலைமுறையாய்த் தமிழ்ப்பெருங்குடி மக்கள் கொண்டாடி வரும் அறுவடைத் திருவிழாவான பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உலகமெங்கும் பரந்து வாழும் ஒட்டுமொத்த எம் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன், மார்கழியின் இறுதிநாளில் பயனிலாப் பழையன யாவற்றையும் கழித்து, பயனுள்ள புதியன யாவற்றையும் ஏற்கும் தை முதல்நாளில் யாவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா கொடுந்தொற்றின் கடும் பாதிப்புகள் ஒருபுறம், பொருளியல், சாதி-மத வெறுப்பு அரசியல் போன்ற சமூக நெருக்கடிகள் இன்னொருபுறம் என பல்வேறு இடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இக்கட்டான இச்சூழலில் இத்தகைய பண்டிகைகளைப் பெருமகிழ்வுடன் கொண்டாட இயலாத அவலம் உள்ளது. எனினும், தமிழ்ப் பாரம்பரியக் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்றுவது நமது கடமைகளுள் ஒன்றாகும்.

தமிழினம் கொண்டாடும் பண்டிகைகளிலேயே பொங்கல் பெருவிழா மட்டும்தான், பிற வகையிலான கலாச்சாரக் கலப்போ, ஆதிக்கமோ இல்லாத தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும். அதாவது, இவ்விழா சாதி- மத அடையாளங்கள் இல்லாமல் இயற்கையைப் போற்றுகிற ; உழைப்பை மதிக்கிற; மூத்தோரை வணங்குகிற; பெண்மையைச் சிறப்பிக்கிற ஒரு மகத்தான திருவிழாவாகும். குறிப்பாக, மதச்சார்பின்மைக்குச் சான்றாக விளங்கும் ஒரு மாபெரும் மக்கள் விழாவாகும்.

தமிழர் பண்பாட்டுக் கூறுகளில் ஊடுருவி மெல்ல மெல்ல அவற்றைச் சிதைக்கும் சதிச்செயல்களில் சனாதன சக்திகள் தொடர்ந்து ஈடுபட்டுவருவதை இச்சூழலில் தமிழினம் உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, திருவள்ளுவரையும் பாரதியையும் அவர்கள் கையிலெடுக்க முனைவது அத்தகைய உள்நோக்கத்துடன் தான் என்பதை நாம் உணரத் தவறினால், காலப்போக்கில் நமது பெருமைக்குரிய பொங்கல்விழாவையும் மதம் சார்ந்த ஒரு பண்டிகையாக மாற்றிவிடுவார்கள்.

நான்கு நாட்கள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டுவரும் பொங்கல் பெருவிழாவின் மூன்றாம் நாள் விழாவில் நாம் முதன்மைப்படுத்தும் ஏருழும் எருதுகளையும், ஏறுதழுவுதல் நிகழ்வின்போது துள்ளிப் பாயும் (ஜல்லிக்கட்டு) காளைகளையும் பண்டிகையிலேயே இல்லாது செய்து நமது பாரம்பரியக் கூறுகளைச் சிதைத்து விடுவர்.

எனவே, தமிழினத்தின் மதசார்பற்ற பெருவிழாவைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வோடு

பொங்கல் பெருநாளைக் கொண்டாடுவோமென யாவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

நம்பிக்கை நடவு செய்த உழவரைப் போற்றுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம். தை முதல் நாளாம் பொங்கல் திருநாள் தமிழகத்தில் மட்டுமின்றி புவிப்பரப்பெங்கும் விரிந்து பரவியுள்ள தமிழ் மக்கள் அனைவராலும் உவகையோடு கொண்டாடப்படுகிறப் பண்பாட்டு பெருவிழாவாகவும் திகழ்கிறது. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற முதுமொழிக்கேற்ப சாதி, மத பேதமற்ற சமத்துவப் பொங்கலாக பொங்கல் விழா கொண்டாடுவோம்.

பொங்கல் திருநாள் உழவர் - உழைப்பாளிகளின் திருநாள். இயற்கையோடு இயைந்தும் இசைந்தும் வாழப்பழகிய மனிதகுலம் கண்டுபிடித்த முதன்மையான தொழில்களில் ஒன்று வேளாண்மை. உலகிற்கு உணவுபடைத்து, உயிர்வளர்க்கிற உழவுத்தொழிலை சிறப்பித்துப் போற்றுகிற இந்த விழா இயற்கைக்கு நன்றி தெரிவிக்கிற விழாவாகவும் திகழ்கிறது. இந்தியத் திருநாட்டின் பன்முகப் பண்பாட்டை பறைசாற்றும் விழாவாகும் இது.

இந்த ஆண்டு பொங்கல் திருநாள் இந்திய விவசாயிகள் பெற்ற மகத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் அர்த்த அடர்த்திமிக்கதாக மாறியுள்ளது. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றிவிடும் வகையில் ஒன்றிய பாஜக கூட்டணி அரசினால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை தங்களது அயர்வற்ற தொடர் போராட்டத்தின் மூலம் திரும்பப் பெற செய்துள்ளனர் இந்திய உழவர்கள். உலகம் முழுவதும் உள்ள போராட்டக்காரர்களுக்கு புதிய நம்பிக்கையை நடவு செய்திருக்கிறது உழுகுடிகளின் வெற்றி. இத்தகையப் போராட்டங்களை தொடர்வதன் மூலமே இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும்.

உலகம் இதுவரை எத்தனையோ கொடும் தொற்றுநோய்களை சந்தித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் பெருந்தொற்று உருமாறி உருமாறி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. எனினும் மருத்துவ அறிவியலின் துணைகொண்டு, இந்த நோயிலிருந்தும் மனிதகுலம் மீளும் என்கிற நம்பிக்கைக் கொள்வோம். “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்பது வள்ளுவர் வாக்கு. முதலாளித்துவத்தின் கோரப்பசிக்கு இயற்கை வளத்தை வேட்டையாடியதால் பூமிக்கிரகத்தின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும். இத்தகைய தொற்றுநோய்கள் பரவுவதற்கு ஒரு முக்கிய காரணம் என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே சுற்றுச்சூழலையும், இயற்கை வளத்தையும், பல்லுயிர் பாதுகாப்பையும் காப்போம்.

ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் பொருண்மைச் சான்றுகள் தமிழ்மொழியின் தொன்மைக்கு சான்று பகர்கின்றன. ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் நம் நாட்டின் மொழிச்சமத்துவத்தைச் சிதைத்து இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிலேயே குறியாக உள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் பன்மைத்துவத்தை அழித்து ஒற்றை தன்மையை திணிக்கின்றனர். மாநில உரிமைகளைப் பறிக்கின்றனர். கூட்டாட்சிக்கு குழிபறிக்கின்றனர். இதைத் தடுத்து நிறுத்தி வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் உயர் பண்பை பாதுகாப்போம்.

நாடு முழுவதும் மத வன்முறைகளைத் தூண்டி அதன் மூலம் வாக்கு அறுவடை செய்ய இந்துத்துவா பரிவாரம் முயல்கிறது. இத்தகைய களைகளை அகற்றுவதன் மூலமே இந்தியாவின் ஒற்றுமைப் பயிர் செழித்து வளரும்.

தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது தமிழர்களின் முதுமொழி. ஆணும் பெண்ணும் சமமென கருதும் பாலின சமத்துவம் நிலைபெறவும், சாதி மதவெறி சக்திகளை முறியடித்து மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும் இந்தப் பொங்கல் நாளில் உறுதியேற்போம். பண்பாட்டு நிகழ்வாக திகழ்ந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டம்தான் மீட்டெடுத்தது. போராட்டங்களின் வழியே பொதுவுடமை மலர்ந்திடவும், மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாத்திடவும் உறுதியேற்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

இரா. முத்தரசன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் “தைத்திருநாள் வாழ்த்துக்கள், தைத் திருநாளில் உறுதி ஏற்று வாழ்த்துகிறோம்” என்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற முதுமொழி மரபில் உழவர் பெருமக்கள் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற தன்னம்பிக்கை ஊட்டும் தைத் திருநாள் தமிழர் வாழ்வோடு கலந்து நிற்கும் கலாச்சாரத் திருநாளாகும்.

நாடோடிகளாக அலைந்து, திரிந்து, வேட்டையாடி வாழ்ந்த மனித சமூகம், உழவுத் தொழில் செய்து, வாழ்விடங்கள் அமைத்து. நிலையான வாழ்வை தொடங்கிய, ஆரம்ப நிலை வேளாண் சமூகம் இயற்கையை வணங்குவதில் உருவான பண்பாட்டு திருவிழா.

மனித உழைப்போடு, கால் நடைகளின் உழைப்பையும் இணைத்து, விதைக்கும் பரப்பளவை விரிவு படுத்துவதில், உற்பத்தியை பெருக்குவதில் வெற்றி கண்ட சமூகம் நிலைத்த வாழ்வுக்கு உயிர் கொடுக்கும் உழைப்புக்கு பொங்கலிட்டு நன்றி கூறி மகிழ்ந்திரும் இன்பத் திருநாள். .

கால வளர்ச்சியில் விஞ்ஞானம் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றிருக்கும் இந்தக் காலத்திலும் வழிவழியான கலாச்சார திருவிழாவாக தைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

“பழையன கழிதல், புதியன புகுதல் வழுவல; கால வகையினானே” என்கிறது நன்நூல் - இதன் படி மார்கழி கடைசி நாளில் பயனற்ற கருவிகளையும், பொருள்களையும் மாற்றி விட்டு, புதுப் பானை, புது அரிசி, செங்கரும்பு, மஞ்சள் என உழைப்பில் விளைந்த புதுப் பொருட்களை கொண்டு பொங்கல் படைத்து மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு உழுவடை நிலத்தின் உரிமை காக்கும் போராட்டத்தில் உழவர் பெருமக்கள் மாபெரும் வெற்றி கண்டுள்ளனர். கார்ப்பரேட் சக்திகளுக்கு ஆதரவான மூன்று வேளாண் வணிக சட்டங்களையும் பாஜக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சரின் மகன் போராடிய விவசாயிகள் மீது கார்களை ஏற்றிப் படுகொலை செய்த கொடூரம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலை அடங்கவில்லை.

அரசியல் அமைப்பின் அடிப்படையான மதச்சார்பற்ற பண்பும், ஜனநாயக வாழ்வு நெறிமுறைகளும் சிதைக்கப்பட்டு, தனி நபர் மையப்பட்ட சர்வாதிகாரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவைக் காட்டிலும் பல மடங்கு பெரு மழையாக பெய்ததால், விளைந்த நெற்பயிர்களையும், நடவு செய்த தாளடி நெற்பயிர்களையும் இழந்து நிற்கும் விவசாயிகள் துயரக் கண்ணீர் வடிக்கிறார்கள். அரசு கட்டிக் கொடுத்த வீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் இழந்து நிற்கும் விவசாயத் தொழிலாளர்கள் ரொக்கப் பண உதவியை எதிர்பார்க்கின்றனர்.

மேட்டு நில சாகுபடியும் வட கிழக்கு தொடர் கனமழையால் பெருமளவு அழிந்து போயுள்ளது.

அரசியல் தளத்தில் மாநில உரிமைகளையும், மக்கள் நலனையும் பலி கொடுத்து, ஒன்றிய அரசிற்கு விசுவாச சேவகம் புரிந்த, சுயநல ஆதாயம் தேடிய ஆட்சியினை ஜனநாயக முற்போக்குக் கூட்டணியால் அகற்றப்பட்டு, திமு கழகம் ஆட்சி அமைத்துள்ளது.

கோவிட் 19 நோய்த்தொற்றின் மூன்றாம் அலைப் பரவலும், ஒமிக்கரான் நோய்த்தொற்றும் அச்சுறுத்தும் காலத்தில், முன் களப்பணி ஏற்று முதலமைச்சர் ஆற்றும் பணி நம்பிக்கையூட்டுகிறது.

சமதர்ம - சுயமரியாதை இயக்கங்கள் கட்டமைத்த சமூக நீதிப் பாதையினை அழித்தொழிக்கும் “நீட்” தேர்வை, தேசியக் கல்விக் கொள்கையினை முறியடிக்க, வகுப்பு வாத சக்திகளை அரசியல் அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற உறுதி ஏற்போம். தொழிலாளர் - விவசாயிகள் நலன் பேணும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பாதையில் அணிவகுப்போம் எனக் கூறி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுதி ஏற்று, தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் அனைவருக்கும் தைத் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “போகியில் பழையன நீங்கி “தை பிறந்தாள் வழி பிறக்கும்” என்று நம் முடைய கிராமங்களில் சொல்லப்படுகிற மொழிக்கேற்ப, மீண்டும் மனிதகுலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கி அனைவரும் அச்சமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்திட தைத்திருநாளில் வழி பிறக்கட்டும். எல்லா வளங்களையும், நலன்களையும் ஒவ்வொருவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பொங்கல் திருநாள் கொண்டு வந்து சேர்க்கட்டும் என் நெஞ்சார வாழ்த்துகிறேன்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ops Eps Pongal Pongal Festival Cm Mk Stalin Thirumavalavan Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment