Advertisment

‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு கொலை மிரட்டல் : புதிய தமிழகம் கட்சியினர் மீது புகார்

10 நிமிடத்திற்கு ஒரு முறையென அழைப்புகள்! வெட்டி கொலை செய்வோம் என மிரட்டல்கள். என் உயிருக்கோ, உடைமைக்கோ எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு அந்த அமைப்புளே காரணம்...

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு கொலை மிரட்டல் : புதிய தமிழகம் கட்சியினர் மீது புகார்

‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சியினர் மீது புகார் கூறப்படுகிறது.

Advertisment

மதுரையை சேர்ந்தவர் திவ்யபாரதி. வழக்கறிஞரான இவர், லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் இயக்கத்தில் வெளியான ஆவணப்படமான ‘கக்கூஸ்’ அதிக கவனம் பெற்றது. மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமையை காரமாக சாடிய படம் அது! நெடுவாசல், கதிராமங்கலத்தில் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாகவும், சேலத்தில் மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் இவர்.

இந்தச் சூழலில் கடந்த 26-ம் தேதி திடீரென கைது செய்யப்பட்டார் திவ்யபாரதி. கடந்த 2009-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் பஸ் மீது கல் வீசியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால், ‘பிடிவாரண்ட்’ அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், அன்று மாலையே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த 27-ம் தேதி புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த ஒரு பேட்டியில், ‘கக்கூஸ் ஆவணப்படத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் மலம் அள்ளுவதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதை உடனடியாக நீக்காவிட்டால் திவ்யபாரதி மீது வழக்கு தொடரப்படும்’ என அறிவித்தார். ஆவணப்படம் வெளிவந்து 6 மாதங்கள் ஆகும் நிலையில் கிருஷ்ணசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பு, திவ்யபாரதி சார்ந்த இயக்கத் தோழர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. திவ்யபாரதியும், ‘வழக்கை சந்திக்க தயார்’ என்பதாக முகநூலில் ‘ரீயாக்ட்’ செய்தார். இதைத் தொடர்ந்து புதிய தமிழகம் ஆதரவாளர்கள் பலரும் திவ்யபாரதியை செல்போனில் தொடர்புகொண்டு ஆபாச அர்ச்சனைகளையும் மிரட்டல்களையும் அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜூலை 27-ம் தேதி தனது முகநூலில் திவ்யபாரதி வெளியிட்டிருக்கும் பதிவு இது.. ‘கக்கூஸ் படம் இயக்கிய எனக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடுப்பதாக செய்தி பரவியதையொட்டி பல அறிமுகமில்லாத நம்பர்களிலிருந்து அழைப்புகள்! படத்தை பார்காமலேயே புரளியை மட்டும் நம்பி கண்டபடி எனக்கு எதிராக தரக்குறைவாக டாக்டருக்கு ஆதரவாக மிரட்டி பேச துவங்கி இருக்கிறார்கள்.

இனி வரும் அழைப்புகளின் ஆடியோ பதிவையும், நம்பரையும் முகநூலில் பொது வெளியில் பகிர இருக்கிறேன் என்பதையும், சைபர் கிரைம் புகார் என அடுத்த கட்டம் நகர இருக்கிறேன் என்பதையும் அந்த சாதி வெறியர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். போனை போட்டு ஊரையும், பேரையும் சொல்லாம தனக்கு தெரிந்த நாலு கெட்ட வார்த்தைகளை பேசிட்டு அழைப்பை துண்டிச்சுட்டு ஓடுறதுக்கு பேரெல்லாம் வீரம் இல்ல. பொறுக்கித்தனம்.’ என சாடியிருந்தார் திவ்யபாரதி.

அதன்பிறகும் மிரட்டல்கள் நிற்காததால், அடுத்த நாள் இன்னொரு பதிவை வெளியிட்டிருக்கிறார் திவ்யா. அதில், ‘என் இரண்டு நம்பர்களையும் வாட்ஸ் அப் குழுக்களில் பரவவிட்டிருக்கிறார்கள். 10 நிமிடத்திற்கு ஒரு முறையென அழைப்புகள்! எடுத்து பேச துவங்கியவுடன், பாலியல் ரீதியான கடும் தாக்குதல்கள்! நிர்வாணமாய் நிறுத்தி வெட்டி கொலை செய்வோம் என மிரட்டல்கள். இது குறித்து மேற்கொண்டு முகநூலில் பதிவிட வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் தொலைபேசி அழைப்புகளின் வன்முறை கூடிக் கொண்டே இருப்பதால், என் உயிருக்கோ, உடைமைக்கோ எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு அந்த அமைப்புளே காரணம் என்பதை பொது வெளியில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கக்கூஸ் படம் வெளிவந்து 6 மாதம் கடந்த பிறகு, வக்கிர அரசியல் திட்டத்தோடு இன்று இந்த தாக்குதல் தொடங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வரும் அழைப்புகளை தானாக பதிவு செய்யும் ஆப்-ஐ ஆக்டிவேட் செய்திருக்கிறேன்.’ என குறிப்பிட்டிருக்கிறார் திவ்யபாரதி.

அவரது இயக்கத் தோழர்கள் ஆலோசனைப்படி இது குறித்து சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறார். இதற்கிடையே இவரது பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கும் புதிய தமிழகம் ஆதரவாளர்கள் சிலர், ‘பூர்வீகமாக உழவுத் தொழிலை செய்கிற சமூகத்தை நீங்கள் எப்படி கொச்சைப்படுத்தலாம்? எங்கள் சமூகத்தினர் மலம் அள்ளுவதாக ஆவணப்படத்தில் உள்ள பதிவை நீக்கத்தானே நாங்கள் கோருகிறோம்’ என விளக்கம் கொடுக்கிறார்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment