Advertisment

Tamil news update: பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு நீடிக்குமா? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

Tamil Nadu News, Tamil News LIVE Latest News 8 April 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Pakistan PM Imran khan

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

Advertisment

18 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டுப்பூசி!

18 வயது மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 tamilnadu news live update: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தி வரும் நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

India News Update: இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு ரூ.5,500 மானியம் வழங்க திட்டமிட்டுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. முதல் 1,000 பேருக்கு கூடுதலாக ரூ.2,000 மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

World News Update: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரிசி, பருப்பு, மருந்துகள், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் மக்கள் வாழ்வாதாரம் மேலும் மோசமடைந்துள்ளது.

இதனால், கொழும்பில் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நுழைவு வாயிலை உடைந்து மக்கள் ஆவேசத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Sports News Update: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 15வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

இதில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:32 (IST) 08 Apr 2022
    அமித்ஷாவின் கருத்து அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது - பழனிவேல் தியாகராஜன்

    இந்தி குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது இந்தியாவில் 70% மாநிலங்களில் இந்தி தாய்மொழி கிடையாது என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.



  • 20:19 (IST) 08 Apr 2022
    அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

    தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் 27 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.



  • 20:18 (IST) 08 Apr 2022
    சென்னை கிண்டியில் பழைக கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    சென்னை கிண்டியில் காலி இடத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டு, பெருமளவில் கரும்புகை பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.



  • 20:15 (IST) 08 Apr 2022
    அனிதா அகாடமியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

    பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், நீட் தேர்வு காரணமாக அனிதா தற்கொலை செய்து கொண்டார் அனிதா பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அகாடமி சிறப்பாக செயல்பட்டு வருகிறது அனிதா அகாடமியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 19:40 (IST) 08 Apr 2022
    இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என அமித்ஷா நினைக்கிறாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

    இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது; ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது ஒரே தவற்றைத் திரும்பத் திரும்ப செய்யும் பாஜக, அதில் வெற்றி பெறாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 18:50 (IST) 08 Apr 2022
    ஹிஜாப் விவகாரம்: நீதிபதிகளை அச்சுறுத்தும் விதமாக பேசிய 9 பேரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

    ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளை அச்சுறுத்தும் விதமாக பேசிய 9 பேரின் முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 18:27 (IST) 08 Apr 2022
    ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி... அமித்ஷா கருத்தால் டாக்டர் ராமதாஸ் அதிர்ச்சி

    பாமக நிறுவன்ர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; இதன் பொருள் மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்பது தான். இந்தியாவின் மொழி தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழமையான மொழியான தமிழுக்கு தான் உண்டு.” என்று தெரிவித்துள்ளார்.



  • 17:31 (IST) 08 Apr 2022
    பாஜக - ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு குறித்து ஆலோசனை - ராகுல் காந்தி

    பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் கூட்டமைப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக ராஷ்ட்ரிய ஜனதா கட்சி பிரமுகர் சரத் யாதவை சந்தித்த நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தகவல் தெரிவித்துள்ளார்.



  • 15:02 (IST) 08 Apr 2022
    அமித்ஷாவின் கருத்துக்கு சித்தராமையா கடும் கண்டனம்

    இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல. இந்தியை தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பல மொழிகள் பேசுவதே இந்திய நாட்டின் ஆதாரம் ஆகும் என்று அமித் ஷாவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா



  • 15:01 (IST) 08 Apr 2022
    பீஸ்ட் படத்தின் 3வது பாடல்

    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது



  • 14:57 (IST) 08 Apr 2022
    பீஸ்ட் படத்தின் 3வது பாடல்

    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது



  • 14:43 (IST) 08 Apr 2022
    முல்லைப் பெரியாறு அணை விவகாரம்

    முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவில் மேலும் இரு உறுப்பினர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • 14:30 (IST) 08 Apr 2022
    ஓபிஎஸ்-இபிஎஸ் மனுக்கள் மீது ஏப்.11ல் தீர்ப்பு

    அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். வழக்கில் வருகின்ற 11ம் தேதி அன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.



  • 14:27 (IST) 08 Apr 2022
    வரலாற்றின் நாயகன் மன்மோகன் சிங் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    அவரை சந்தித்த நொடிகள்தான் வாழ்வின் உச்சம். சந்திப்பின் போது அவர் எனக்கு அளித்த தன்னம்பிக்கையும் ஆசிர்வாதமும் தான் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷமாக என் நினைவோடு இருக்கும் என்று உருக்கம்.



  • 13:47 (IST) 08 Apr 2022
    எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல்

    பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்ட வழக்கில் மீண்டும் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல். தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்ளார்.



  • 13:43 (IST) 08 Apr 2022
    பெரும் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன் இத்தனை கோடி! ராகுல் காந்தி ட்வீட்

    எரிபொருள் வரியாக மக்களிடம் இருந்து பெறப்பட்டது ₹26.51 லட்சம் கோடி. பெரும் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன் ₹10.86 லட்சம் கோடி என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ட்வீட்



  • 13:41 (IST) 08 Apr 2022
    13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனத்தாலும் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.



  • 13:00 (IST) 08 Apr 2022
    தர்மேந்திர பிரதான்-ஆர்.என்.ரவி சந்திப்பு!

    டெல்லியில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துதல், தேசிய கல்வி கொள்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்



  • 13:00 (IST) 08 Apr 2022
    சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின்

    பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 12:21 (IST) 08 Apr 2022
    25,354 பேரை மக்கள் நலப்பணியாளர்களாக திமுக அரசு நியமித்தது..

    மக்கள் நலப்பணியாளர்களை அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது. ஆனால் திமுக அரசு, ஊரகப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்கள் 25,354 பேரை மக்கள் நலப்பணியாளர்களாக நியமித்தது என சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!



  • 12:05 (IST) 08 Apr 2022
    1,890 தமிழக மாணவர்கள் மீட்பு!

    உக்ரைனில் இருந்து 1,890 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மாணவர்களை மீட்க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது என சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!



  • 12:04 (IST) 08 Apr 2022
    4 வழிச்சாலை.. அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!

    மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.



  • 11:55 (IST) 08 Apr 2022
    ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என இந்திய ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 11:51 (IST) 08 Apr 2022
    நிலம் கையகப்படுத்தல்.. தங்கம் தென்னரசு வேண்டுகோள்!

    தொழில் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்துவதில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 11:51 (IST) 08 Apr 2022
    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான குற்ற வழக்கு..

    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான குற்ற வழக்குகளை போதிய நீதிமன்றங்கள் அமைத்து ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்கக் கோரிய வழக்கில், விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.



  • 11:23 (IST) 08 Apr 2022
    வன்னியர் உள் இட ஒதுக்கீடு.. ராமதாஸ் கடிதம்!

    வன்னியர்களின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளி விவரங்களை ஆணையம் மூலம் திரட்டி, உள் இட ஒதுக்கீட்டிற்கான புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.



  • 11:22 (IST) 08 Apr 2022
    தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

    மகளிர் இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மாற்றாக மகளிர் இலவசப் பேருந்து திட்டத்தை ஒப்பிடுவது நியாயமற்ற செயல் என தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • 11:21 (IST) 08 Apr 2022
    சசிகலா-ஓபிஎஸ், ஈபிஎஸ் வழக்கு!

    அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை, நிராகரிக்கக் கோரி அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வேறொரு நாளில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளிவைத்தது.



  • 10:57 (IST) 08 Apr 2022
    வன்னியர் இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது-அன்புமணி

    வன்னியர் இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதகம் ஏற்படாது. தமிழக அரசு நீதிமன்றத்தில் தரமான வழக்கறிஞர்களை வைத்துதான் வாதாடியது என்றார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.



  • 10:50 (IST) 08 Apr 2022
    குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 4%

    குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து 11வது முறையாக 4%ஆக தொடரும். நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார்.



  • 10:36 (IST) 08 Apr 2022
    நடப்பு கூட்டத் தொடரிலேயே புதிய சட்டம்-அன்புமணி வலியுறுத்தல்

    10.5% இட ஒதுக்கீடு குறித்த புள்ளிவிவரங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்து நடப்பு கூட்டத்தொடரிலேயே புதிய சட்டம் இயற்ற முதல்வரிடம் வலியுறுத்தினார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.



  • 10:26 (IST) 08 Apr 2022
    முதல்வருடன் அன்புமணி சந்திப்பு

    சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழு சந்தித்தது. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.



  • 10:19 (IST) 08 Apr 2022
    சட்டசபை இன்றைய அமர்வு தொடங்கியது

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய அமர்வு தொடங்கியது. கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.



  • 10:08 (IST) 08 Apr 2022
    மன் கி பாத் நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடிற்கு மக்களிடம் கருத்துகள் வரவேற்பு

    மன் கி பாத் நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள்கள் குறித்த யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. முக்கிய கருப்பொருள்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.



  • 09:50 (IST) 08 Apr 2022
    ரூ.70 கோடி மதிப்பீட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை

    சென்னை, மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.70 கோடி மதிப்பீட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டம் தொடக்கம். மலை கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



  • 09:33 (IST) 08 Apr 2022
    சுமியில் இருந்து வெளியேறியது ரஷ்ய ராணுவம்

    உக்ரைன், சுமி பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் முழுவதுமாக வெளியேறியது. ரஷ்ய ராணுவம் விட்டுச்சென்ற வெடி பொருட்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார் சுமி கவர்னர்.



  • 09:21 (IST) 08 Apr 2022
    விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு- 4 பேருக்கு ஜாமின்

    விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 சிறார்களுக்கு ஜாமின் வழங்கி இளைஞர்கள் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் உத்தரவிட்டார்.



  • 09:01 (IST) 08 Apr 2022
    அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆணை

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி, நிதி வெளியீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கான ஆணைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.



  • 08:51 (IST) 08 Apr 2022
    சிப்காட் துணை மின் நிலைய ஊழியர் பலி

    புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த மின் ஊழியர் ஜெய்சங்கர் உயிரிழந்தார். அஜாக்கிரதையாக செயல்பட்டதாக உதவி மின் செயற்பொறியாளர்கள் ரகுநாதன் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்



  • 08:35 (IST) 08 Apr 2022
    வில் ஸ்மித்திடம் இன்று ஆஸ்கர் அமைப்பு விசாரணை

    ஆஸ்கர் விருது விழாவில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக நடிகர் வில் ஸ்மித்திடம் ஆஸ்கர் அகாடெமி அமைப்பு இன்று விசாரணை நடத்தவுள்ளது.

    இனிவரும் ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித் பங்கேற்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக அமைப்பின் தலைவர் டேவிட் ரூபின் தெரிவித்தார்.



Tamil Nadu Live Updats Live News Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment