Advertisment

ஓலா, ஊபர் வருகையால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதா? களநிலவரம் என்ன?

சிங்காரச் சென்னையின் தனித்த அடையாளங்களாக திகழும் ஹீரோக்களின் வாழ்க்கையை விளக்கும் கட்டுரைகளில் இன்று நாம் ஆட்டோ ஓட்டுநர்களின் ஒரு நாள் வாழ்வை அறிந்து கொள்ளப் போகின்றோம்

author-image
WebDesk
New Update
Chennai auto drivers, ola auto, drivers

Janani Nagarajan

Advertisment

நடுத்தர மக்களின் அவசர தேவைக்கும், அத்தியாவசிய தேவைக்கும், பயணம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே, மனதில் தோன்றுவது ஆட்டோவில் பயணம் செய்வது பற்றித்தான். நமது சிறுவயதிலிருந்தே ஆட்டோ பயணங்கள் நம் வாழ்வில் வளம் வர ஆரம்பித்து விடுகிறது. பள்ளிக்கு செல்வதிலிருந்து மருத்துவ தேவைகள் வரை ஆட்டோவின் பணி நம் வாழ்வில் இன்றியமையாத பங்காக இருந்து வருகிறது.

"என்னிடம் கார் கூட இல்லை நான் ஆட்டோக்களில் சவாரி செய்கிறேன், நான் சிறுவயதிலிருந்தே ஆட்டோவில் பயணம் செய்து பழகிவிட்டேன். அதனாலேயே ஆட்டோவில் வெகுதொலைவிற்கு போனாலும் எனக்கு களைப்பு இருக்காது" என்று ஆட்டோவின் மீது உள்ள பிரியத்தை கூறுகிறார் சகுந்தலா தேவி.

ஆட்டோ ஓட்டுநர்களை நமது சிங்காரச் சென்னையின் அடையாளம் என்றே கூறலாம். தமிழ் சினிமா எப்போதும் ஆட்டோ ஓட்டுநர்களை கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரமாகவும் சித்தரிக்கின்றனர். அதைப் போல நம்மூர் மக்களும் ஆட்டோ ஓட்டுநர்களை 'ஹீரோவாகவே' பார்க்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்படும் வேதனைகளைக் கேட்டால் கல்லும் கரைந்து விடும்.

குரோம்பேட்டையில் வசிக்கும் ராஜா.பி (வயது 50) தனது ஆட்டோ ஓட்டும் அனுபவங்களை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

"நான் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்; வங்கியில் கடன் வாங்கி, ஆட்டோ ஒட்டியே என் குடும்பத்தை கவனித்து வருகிறேன். ஒரு நாளுக்கு ரூ. 1000 வரை வருமானம் கிடைத்துக்கொண்டு இருந்தது, ஆனால் அது நாளடைவில் பாதியாக குறைந்தது. 2016 வரை எங்கள் வருமானம் நிலையாக இருந்தது. குடும்பத்தேவைகளும் பூர்த்தியடைந்தது; அதற்க்கு பிறகு, 'ஓலா, ஊபர்' போன்ற கால் டாக்சி சேவைகளின் வருகை ஆரம்பமானது. கால்டாக்சியின் வருகைக்கு பிறகு எங்கள் வருமானம் பாதியாக குறைந்து விட்டது. ஆட்டோவை விட கால்டாக்சியின் கட்டணம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம், அதனால் மக்கள் கால்டாக்சியைத் தேர்ந்தெடுத்து அதில் பயணிக்கின்றனர்" என்றார் ராஜா.

"அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆட்டோ மீட்டரின் விலை 1.8 கி.மீ.க்கு ரூ.25 ஆகும். அதை தான் நாங்கள் இன்றும் பின்பற்றிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் மீட்டரின் கட்டணத்தை அரசாங்கம் உயர்த்தவில்லை. கால் டாக்சி நிறுவனம் அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட குறைவாக வசூலிக்கிறது. அரசாங்க விதிமுறைகளின் படி, வாகனங்கள் ஓட்டும்பொழுது கைபேசியை உபயோகிக்கக் கூடாது, ஆனால் கால் டாக்சி நிறுவனத்தில் இருக்கும் அனைவருமே வாகனம் ஓட்டும்பொழுது கைபேசியை கூகுள் மாப் பார்ப்பதற்கு பயன்படுத்துகின்றனர். கைபேசியில் ஜி.பி.எஸ்-யைப் பார்த்துக் கொண்டே வாகனம் ஓடுவதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது" என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் கவலைகளை கூறினர்.

மேலும் படிக்க: கணினி முதல் கருவாடு வரை; சாமான்ய மக்களின் சூப்பர் மார்க்கெட் – பல்லாவரம் சந்தைக்கு சென்றதுண்டா?

இவ்வாறு அரசாங்கம் நிர்ணயித்த விலையை மட்டுமே ஆட்டோ வசூலிப்பதால் அவர்களின் வருமானம் பாதியாக குறைந்து விட்டது. வருமானம் குறைந்த நிலையில் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. கடன் காப்பீடு, வீடு நிர்வாகம் மற்றும் குழந்தைகளின் கல்வி ஆகிய இவை அனைத்தும் பாதிக்கப்படுவதே, இவர்களின் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ஆட்டோவை விட கால் டாக்சி குறைவாக கட்டணம் வசூலிக்கிறது என்று நினைக்கும் மக்கள், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்க்கையை பற்றித்தெரிந்து அவர்களின் பணியை செய்ய வாய்ப்பு கொடுப்பது மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல திட்டங்கள் கொண்டுவரும்படி அரசாங்கத்திடம் கோரிக்கையிடுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment