வங்கக்கடலில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுப்பெற்றுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 390 கி.மீ., தொலைவிலும், விசாகபட்டினத்தில் இருந்து 430 கி.மீ., தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒடிசா - கோலாப்பூரில் இருந்து 610 கி.மீ., தொலைவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா - தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இன்று (டிச.21) முதல் 25ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்க கூடும்.
இன்று வடக்கு கடலோரப்பகுதிகள், அதனை ஓட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஓரிசா கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை (22-12-2024) வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை மறுநாள் (23-12-2024) மத்திய மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“