Advertisment

திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை : ஆர்.கே.நகர் வேட்பாளர் முடிவு?

திமுக நிர்வாகிகளுடன் இன்று ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறார். அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் வேட்பாளர் தேர்வு பற்றி பேசப்படுகிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
rk nagar, dmk, mk stalin, marudhu ganesh, rk nagar by-election

திமுக நிர்வாகிகளுடன் இன்று ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் வேட்பாளர் தேர்வு பற்றி பேசப்படுகிறது.

Advertisment

சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரு நாட்களே(நவம்பர் 27) இருக்கிறது. எனவே அனைத்துக் கட்சிகளும் துரித கதியில் வேட்பாளரை முடிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

திமுக சார்பில் கடந்த ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்த தேர்தலில் பகுதி செயலாளரான மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பொருளாதார சூழலில் வலுவானவராக இல்லாவிட்டாலும், மீண்டும் தன்னை வேட்பாளராக நிறுத்தி செலவு விவகாரங்களை கட்சியே கவனித்துக் கொள்ளவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அவரிடம் இருக்கிறது.

மறைந்த சற்குண பாண்டியனின் மருமகளான சிம்லா முத்துச்சோழன், பெருந்தலைவர் காமராஜர் தங்கை வழிப் பேத்தியான மயூரி ஆகியோரும் சீட் கேட்டு கோதாவில் குதித்திருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமாக உள்ள மீனவ சமுதாய வாக்குகள் அதிமுக.வின் பெரும் பலமாக உள்ளன. எனவே அதை தகர்க்கும் வகையில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு சீட் கொடுக்கும் பேச்சும் இருக்கிறது.

ஆனாலும் கடந்த முறை வேட்பாளராக நின்று கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்த மருதுகணேஷுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அவரை நிறுத்தினால், இந்த முறை வேட்பாளரை அறிமுக செய்யும் பிரசாரம் சுலபம் என ஸ்டாலின் கருதுவதாக கூறுகிறார்கள்.

இது குறித்து முடிவெடுக்க இன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வட சென்னை திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு இதில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஆர்.கே.நகரில் யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிகிறார். இன்றே வேட்பாளரை திமுக அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக விருப்ப மனு பெறப்பட்டு, அதன் அடிப்படையில் நேர்காணல் நடத்தி திமுக.வில் வேட்பாளர் தேர்வு நடைபெறும். அந்த நடைமுறை இந்த முறை கடை பிடிக்காததும், ஏற்கனவே வேட்பாளராக நின்ற மருது கணேஷுக்கு அதிக வாய்ப்பு இருப்பதை உணர்த்துகிறது.

 

Mk Stalin Dmk Marudhu Ganesh Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment