கருணாநிதி 95-வது பிறந்த நாள்: ராகுல் காந்தி, விஜயகாந்த், குஷ்பூ வாழ்த்து

‘வாழ்த்துவதற்கு வயது இல்லையே அய்யா. வணங்குகிறேன். நாடு கண்ட மிகச் சிறந்த மதிப்புக்குரிய தலைவர்களில் ஒருவரான கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’

கருணாநிதி 95-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று (மே 3) 95-வது பிறந்த நாள்! இதையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கோபாலபுரத்தில் கருணாநிதியின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து கூறினர்.

கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் செய்தி வெளியிட்டார். அதில், ‘கருணாநிதிஜியின் பிறந்த நாளில், எனது அன்பான வாழ்த்துகள். கருணாநிதிஜி இந்தியாவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர். சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர், பேச்சாளர். நீண்ட, நலமான வாழ்வுக்கு அவருக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும்’ என மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாழ்த்துச் செய்தியில், ‘இன்று முதுபெரும் தலைவர் திரு கலைஞர் அவர்களின் பிறந்த நாள். அவருக்கு என்னுடைய இனிய நல்வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்த வாழ்த்துச் செய்தியில், ‘இன்று 95 வது பிறந்தநாள் காணும் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் திமுக தலைவர் கலைஞர் அவர்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். 95 வயதிலும் அரசியல் பணியை அவர் சீரும் சிறப்புற செய்யவேண்டும், மேலும் கலைஞர் அவர்கள் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.’ என கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘திரு கருணாநிதிஜிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் அவரது நல்ல உடல் நலத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பிரார்த்திக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள செய்தியில், ‘அரசியல் ஞானி, உலகத் தமிழர்களின் தலைவர், முத்தமிழ் அறிஞர், சாதனைகளின் இமயம், 5 முறை முதல்வர், 50 ஆண்டுகள் திமுகவின் தலைவர், தோல்வியே கண்டிராத சாதனையாளர், தமிழ்த்தாயின் தவப்புதல்வர், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் நூறாண்டுகளுக்கு மேலும் வாழ்ந்திட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் என் சார்பிலும் இன்றைய அவரது பிறந்த நாளில் உளமார வாழ்த்துகிறேன்.’ என கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பூ வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ‘வாழ்த்துவதற்கு வயது இல்லையே அய்யா. வணங்குகிறேன். நாடு கண்ட மிகச் சிறந்த மதிப்புக்குரிய தலைவர்களில் ஒருவரான கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close