மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம், தான் தாடி வைத்திருந்ததால் கடந்த 2018ம் ஆண்டு தன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். தனது ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி இப்ராஹிம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நேற்று (ஜூலை 12) நீதிபதி விக்டோரியா கெளரி முன் விசாரணைக்கு வந்ததது. அப்போது பேசிய நீதிபதி விக்டோரியா கெளரி, “மனுதாரர் மதுரை முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். அவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தாடி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர், 2018-ம் ஆண்டு நவம்பர் 9 முதல் டிசம்பர் 9 வரை 31 நாட்கள் முறையான அனுமதி பெற்று மெக்கா, மதினா சென்றுள்ளார். பின்பு இடது காலில் பாதிப்பு ஏற்பட்டதால் டிசம்பர் 10-ம் தேதி விடுப்பை நீட்டித்துத் தருமாறு உதவி காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவருக்கு விடுப்பு நீட்டிக்கப்படாததோடு, தாடி வைத்திருந்ததால் அது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பின்னர், அனைத்து சாட்சிகளையும் முறையாக விசாரிக்காமல், அவருக்கு 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் ஆணையரிடம் முறையிட்ட நிலையில், அதனை 2 ஆண்டுகளாக குறைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மதங்களையும், கலாச்சாரங்களையும் கொண்டது தான் இந்தியா. பலதரப்பட்ட குடிமக்களின் நம்பிக்கைகளும், கலாச்சாரமும் ஒருங்கே கொண்டது தான் இந்தியாவின் அழகும், தனித்துவமும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு.
மனுதாரர் தரப்பில் காவல்துறையினராக இருந்தாலும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் இருக்கும் போதும் நேர்த்தியான தாடியை வைத்துக்கொள்ள அனுமதி வழங்குவதை சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு காவல்துறை சட்ட விதிகளிலும் அனுமதி உண்டு.
அவ்வாறு இருக்கும் போது தாடி வைப்பதை தடை விதிக்க முடியாது. இறைத்தூதரான நபிகள் நாயகத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள், வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மனுதாரர் உடல்நலக்குறைவுடன், அது தொடர்பான மருத்துவ சான்றிதழுடன் விடுப்பு கோரி உள்ளார். அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, தண்டனையை மாற்றி அமைத்த மதுரை மாவட்ட காவல் ஆணையரின் உத்தரவு அதிர்ச்சியூட்டும் வகையில் ஏற்றத்தாழ்வுடன் உள்ளது. ஆகவே மனுதாரருக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 8 வாரங்களுக்கு உள்ளாக இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" எனக் கருத்துக் கூறி நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“