Advertisment

பாஜக.வினருக்கு இணையாக அத்வானியை புகழ்ந்த மாஃபாய் பாண்டியராஜன் : தாம்பரம் விழாவில் பரபரப்பு

தாம்பரம் பள்ளி விழாவில் முன்னாள் துணை பிரதமர் அத்வானியை பாஜக.வினருக்கு இணையாக அதிமுக அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் புகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
lk advani at chennai, lk advani at thambaram school function, minister mafoi pandiyarajan praises lk advani

தாம்பரம் பள்ளி விழாவில் முன்னாள் துணை பிரதமர் அத்வானியை பாஜக.வினருக்கு இணையாக அதிமுக அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் புகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

சென்னையை அடுத்த தாம்பரத்தில் ஜெய்கோபால் கரோடியா தேசிய பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியின் தாளாளர் நாராயணராவ், பாஜக முன்னாள் நிர்வாகி! 1979-ம் ஆண்டு முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி இந்தப் பள்ளிக்கு வந்திருந்து, புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தற்போது இந்தப் பள்ளியின் 75-ம் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளி தாளாளரும் பாஜக முன்னாள் மாநில தலைவருமான நாராயணராவ், அத்வானிக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று பள்ளி விழாவில் அத்வானி நேற்று (செப்.26) கலந்து கொண்டார். விழாவில் பேசிய அத்வானி, ‘இந்த பள்ளிக்கு 1979-ல் நான் வரும்போது 200 மாணவர்கள் இருந்தனர். தற்போது 75-ம் ஆண்டு விழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு கல்வி பயில்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

சிறந்த மாணவர்களை இந்த கல்வி நிலையம் உருவாக்கி இருக்கிறது. மாணவர்களை இந்த விழாவில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சிறப்பாக பள்ளியை நடத்தி வரும் பள்ளி செயலர் நாராயணராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்’ என்றார்.

விழாவில் தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசுகையில், ‘மாணவர்கள் டாக்டர், கலெக்டர், இன்ஜினியர் போன்ற பதவிகளை மட்டும் தேர்வு செய்யாமல் பல துறைகளிலும் எதிர்காலம் இருப்பதை உணரவேண்டும். அனைத்து துறைகளிலும் சாதிப்பவர்களாக தங்களை உருவாக்கி கொள்ள வேண்டும்’ என்றார்.

சர்தார் வல்லபாய் படேலுக்கு அடுத்தபடியாக, அத்வானியை இரண்டாவது இரும்பு மனிதர் என பாஜக.வினர் அழைப்பதுண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் மாஃபாய் பாண்டியராஜனும், அத்வானியை அதே அடைமொழியுடன் அழைத்தார். இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.

வாஜ்பாய் பிரதமராகவும், அத்வானி துணை பிரதமராகவும் இருந்த காலத்தில் மாஃபாய் பாண்டியராஜன், பாஜக.வில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு தேமுதிக.வுக்கு சென்று வந்த மாஃபாய்க்கு, ஜெயலலிதா முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக் கல்வித்துறையை ஒதுக்கினார். அந்தப் பதவியை தியாகம் செய்துவிட்டு ஓபிஎஸ் அணிக்கு சென்ற மாஃபாய்க்கு, திரும்ப இணைந்தபோது பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு இல்லாத இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இவருக்கு முக்கிய இலாகா பெற்றுக் கொடுக்க ஓபிஎஸ்.ஸும் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அதிமுக உள்கட்சி விவகாரங்களில் பட்டும் படாமலுமாக இருந்து வருகிறார் மாஃபாய்! இந்தச் சூழலில் பாஜக.வினருக்கு இணையாக அத்வானியை அவர் ‘இரும்பு மனிதர்’ என வர்ணித்தது பலரது புருவங்களை உயர வைத்தது.

இந்த விழாவில் விசுவ இந்து வித்யா கேந்திர தலைவர் எஸ்.வேதாந்தம், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ராஜ்யசபா உறுப்பினர் இல.கணேசன், பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதா சுப்பிரமணியம், எம்பிக்கள் மைத்ரேயன், கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், சியோன் பள்ளி தாளாளர் விஜயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Bjp Lk Advani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment