போர்வெல் லாரி - டெம்போ மோதல், 10 பேர் பலி : கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே போர்வெல் லாரி மீது டெம்போ மோதிக்கொண்டதில் 10 பேர் பலியானார்கள். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே போர்வெல் லாரி மீது டெம்போ மோதிக்கொண்டதில் 10 பேர் பலியானார்கள். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன்(44). இவர் குடும்பத்தினருடன் டெம்போ டிராவலர் வேனில் திருப்பதிக்கு சென்றார். வேனை டிரைவர் ராகேஷ்(33) ஓட்டினார். திருச்சி வழியாக வேன் சென்று கொண்டிருந்தது.

இன்று அதிகாலையில் டெம்போ டிராவலர், துவரங்குறிச்சி காச மோர்னிமலை அருகில் சென்றபோது சாலையில் நின்றிருந்த ஒரு போர்வெல் லாரியின் பின்புறத்தில் மோதியது. அந்த போர்வெல் லாரி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தது. இதில் டெம்போ டிராவலர் வேனின் முன்பகுதி நொறுங்கியது.

கன்னியாகுமரி வேனில் பயணம் செய்த அத்தனை பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் ஒருவர் பலியானார். காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை தீயணைப்புத்துறையினர், போலீஸார் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சிலர் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் பலியான 10 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. அவர்களின் பெயர்கள் வருமாறு : 1. நந்தீஷ்(13), 2. ஜெய சந்தியா(10), 3. நடராஜன் (44), 4.வைத்திய லிங்கம் (79), 5.புஷ்கலா(38), 6.ஈஸ்வரன், 7.நீலா(5),
8. சொர்ணா (48), 9. அய்யப்பன் (44), 10.சங்கர குமார் (43)

விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் வருமாறு : 1.ஒட்டுநர் ராகேஷ்(33), 2. கார்த்திக்(12), 3. தனம்மாள்(42), 4.வைஷ்ணவி (21), 5.வேல தேவி(35). இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

 

×Close
×Close