மெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்குமா? ஆய்வு சொல்வது என்ன?

மெரினா கடலில் குளிப்பதால் செரிமான பிரச்சினை, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி ஏற்படுமாம்

சென்னை வாசிகளுக்கு மெரினா பீச் என்றால் கொள்ளை பிரியம் உண்டு. மாலை நேரத்தில், கடல் காற்றில், அலைகளை ரசித்து, தங்கள் கவலைகளை குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு தொலைக்க ஏற்ற இடம் அது. அப்படியே ஒரு குளியல் போட்டால் முழு திருப்தி. பெரும்பாலான சென்னை வாசிகளின் பெரும்பாலான வீக் எண்ட் பிளான் இதுவாகத் தான் இருக்கும். ஆனால், இந்த மெரினா கடலில் குளித்தால் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னைக் கடல் நீரில் உள்ள மாசு குறித்து மத்திய கடல் ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற்கொண்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர், கோவளம் ஆகிய 5 கடற்கரையில் உள்ள மொத்தம் 192 மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோடை மற்றும் மழைக் காலங்களில் உள்ள நீரின் மாதிரிகளை சேகரித்து, மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகள் அதிகரித்து நீர் மாசடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வழியாக செல்லும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், தொடர்ந்து கடலில் கலந்து வருவதால் பாக்டீரியாக்கள் அதிகரித்து, கடல் நீர் மாசு அடைந்து உள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இதில் மெரினாவில் சேகரிக்கப்பட்ட நீரில் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மெரினா கடலில் குளிப்பதால் செரிமான பிரச்சினை, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுமாம்.

இதேபோல் மற்ற கடற்பகுதியிலும் கழிவுகள் கலப்பதால் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற பகுதிகளுடன் கம்பேர் செய்யும் போது, கோவளம் கடல் நீரில் மட்டுமே குறைந்த அளவு மாசு கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close