திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது!

ஜெயலலிதா மரணத்துக்குப் பின் தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி தருகிறது

இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில்,மே 17ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது. இதன் நினைவாக ஆண்டுதோறும் சென்னை மெரினாவில் மே 17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் நடந்த போராட்டத்தின்போது அங்கு லட்சக்கணக்கான பேர் குவிந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது. இறுதியில், போராட்டம் எப்படி முடியக் கூடாது என அனைவரும் எதிர்பார்த்தார்களோ அப்படியே காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதையடுத்து, மெரினாவில் கூட்டம் நடத்த சென்னை காவல்துறை தடை விதித்தது. அரசியல் கட்சியின் எதிர்ப்பைத் தொடர்ந்து தடையைத் திரும்பப்பெற்றது.

இந்நிலையில், மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த மே 17 இயக்கத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் நிர்வாகிகள் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் தலைமையில், மே 21ஆம் தேதி, மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, சட்டவிரோதமாக கூடியதாககூறி, திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய நான்கு பேர் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், திருமுருகன் காந்தி மீது 17 வழக்குகள் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பல வழக்குகள் திருமுருகன் மீது உள்ளன” என்றனர்.

இந்தக் கைது நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஜெயலலிதா மரணத்துக்குப் பின் தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி தருகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

×Close
×Close