நளினிக்கு பரோல் கிடைக்குமா? அரசு கருத்தை தெரிவிக்க ஹைகோர்ட் உத்தரவு

மகளின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வசதியாக தன்னை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும். இது காலதாமதமாகும் பட்சத்தில், ஆறு மாத காலம் பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும்....

மகளுக்கு திருமணம் ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆறு மாதம் பரோலில் வழங்க கோரிய நளினியின் மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், கடந்த 1991 ஆம் ஆண்டு கைதான நளினி உள்ளிட்டோருக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர், கடந்த 2000 ஆம் ஆண்டு தூக்குத் தண்டணை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

வேலூர் மத்திய பெண்கள் சிறையில், கடந்த 26 ஆண்டுகளாக தண்டனையை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்னரே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை நளினி தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ராஜீவ் கொலை வழக்கில், 45 நாள்கள் கர்ப்பிணியாக இருந்தபோது தனது
கணவர் முருகனுடன் கைது செய்யபட்டு சிறைக்கு சென்ற தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது 25 வயதாகும் மகள் ஹரித்ரா, தாத்தா பாட்டியுடன் லண்டனில் வசித்து வருகிறார். அவளது திருமணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வசதியாக தன்னை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும். இது காலதாமதமாகும் பட்சத்தில், ஆறு மாத காலம் பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும்.

இது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் 12 மற்றும் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, வேலூர் பெண்கள் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளேன். அந்த மனுக்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால், தனது கோரிக்கை மனுக்களை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

மேலும் ஆயுள் தண்டணை கைதிகள் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் விடுப்பில் செல்லலாம்
என்ற விதிமுறைகள் இருந்தும், தான் சிறையிலிருந்த 26 ஆண்டுகளில் ஒரு முறை கூட அந்த சலுகையை பயன்படுத்தியது இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக தமிழக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Click here t

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close