மயிலாடுதுறையில் இருந்து சேலத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நேரடி ரயிலுக்கு கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோயில் மாநகரம் கும்பகோணம் வழியாக திருச்சி, கரூர், நாமக்கல் மற்றும் சேலத்தை இணைக்கும் வகையில் நேரடி ரயில் இயக்க, பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மயிலாடுதுறை - திருச்சி, திருச்சி- கரூர், கரூர்- சேலம் ஆகிய மூன்று ரயில்களை இணைத்து மயிலாடுதுறையிலிருந்து சேலத்திற்கு நேரடி ரயில் இயக்க அண்மையில் ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
அதைத்தொடர்ந்து வண்டி எண் 16811 மயிலாடுதுறை - சேலம் விரைவு பாசஞ்ஞர் ரயில் இன்று இயக்கப்பட்டது.
6.20க்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு கும்பகோணத்திற்கு 7.20 மணிக்கு வந்து சேர்ந்தது. அந்த ரயிலுக்கு தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் குடந்தை அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் லோகோ பைலட் ஜோதிபாண்டியன் மற்றும் பார்த்திபன் கார்டு யோகநாதன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர். பயணிகள் சார்பில் என்ஜினுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த புதிய ரயிலில் முதல் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் ரயில் புறப்பட்டு தஞ்சை நோக்கி சென்றது.
இந்த நேரடி ரயில் தினம்தோறும் மயிலாடுதுறையில் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருச்சி, கரூர், நாமக்கல் ராசிபுரம் வழியாக சேலத்திற்கு மதியம் 1.45 சென்றடையும்.
மறு மார்க்கத்தில் சேலத்தில் மதியம் 2.05-க்கு புறப்பட்டு அதே வழியாக மீண்டும் மயிலாடுதுறைக்கு இரவு 9.40 மணிக்கு சென்றடையும். மயிலாடுதுறையில் இருந்து சேலம் வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும்.
முன்னதாக, கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு செயலாளர் வி.சத்தியநாராயணன் தெரிவிக்கையில்; மயிலாடுதுறையில் இருந்து சேலம் நோக்கி இயக்கப்படும் இந்த ரயில் கோயில்கள் நிறைந்த கும்பகோணம், தஞ்சை, திருச்சி மற்றும் வர்த்தகம் நிறைந்த கரூர், நாமக்கல் வழியாக சேலம் சென்றடைகிறது. இந்த ரயில் மூலம் ஆன்மீக பயணிகளும், வர்த்தகம் சார்ந்தவர்களும் பெரும் பயன் பெறுவர்.
மேலும், கும்பகோணம் சுற்றி பெரும்பான்மையான இடங்களில் நெசவாளர்கள் பட்டு உள்ளிட்ட பிரபல ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சேலத்திலும் நெசவுத்தொழில் அதிகம்.
தமிழக அளவில் பிரசித்தி பெற்ற பட்டு உற்பத்திகளில் கும்பகோணமும், சேலமும் இடம் பெற்றிருக்கின்றன. ஆகவே இந்த மயிலாடுதுறை சேலம் ரயில் சேவை கும்பகோணம்-சேலம் நெசவாளர்களை இணைக்கும் பாலமாக செயல்படுகின்றது.
மேலும், டெல்டா மாவட்டங்களில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு ரயில்கள் இதுவரை இயக்கப்படாத நிலையில் மயிலாடுதுறை - சேலம் பாசஞ்சர் ரயில் சேவை பெருமளவு மக்களுக்கு பேருதவியாக அமைந்திருக்கின்றது என்றார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.