Advertisment

விஜய் மீதான திமுக கோபம் தீரவில்லை : பட்டும் படாமலும் ஆதரவு கொடுத்த ஸ்டாலின்!

விஜய் மீதான திமுக கோபம் இன்னும் தீரவில்லை. மெர்சல் பிரச்னையில் பட்டும் படாமலும் மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்திருப்பது பகையை உறுதிப்படுத்துகிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : மு.க.ஸ்டாலின் 7ம் தேதி பிரசாரத்தைத் தொடங்குகிறார்

விஜய் மீதான திமுக கோபம் இன்னும் தீரவில்லை. மெர்சல் பிரச்னையில் பட்டும் படாமலும் மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்திருக்கிறார்.

Advertisment

விஜய்-யின் மெர்சல், அகில இந்திய அளவில் அரசியல் விவாதம் ஆகியிருக்கிறது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறித்தும், டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்தும் தவறான தகவல்கள் அடிப்படையில் விமர்சனம் வைத்திருப்பதாக பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

விஜய்-க்கு பாஜக-வின் எதிர்ப்பாளர்களான காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு கொடுக்கின்றன. குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று (ஆகஸ்ட் 20) முதல் இந்தப் பிரச்னையில் பாஜக-வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘படத் தயாரிப்பாளர்களுக்கு அறிவிப்பு : சட்டம் வருகிறது, அரசின் கொள்கைகளை பாராட்டி டாக்குமென்ட்ரி படங்களை மட்டுமே நீங்கள் தயாரிக்கலாம்’ என மத்திய அரசை கலாய்த்திருக்கிறார். ‘பராசக்தி படத்தை இப்போது வெளியிட முடியுமா?’ என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் ப.சிதம்பரம்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு...

ப.சிதம்பரத்தின் ‘ட்வீட்’ மெர்சல் விவகாரம் மீது அகில இந்திய கவனத்தை அதிகப்படுத்தியது. டெல்லியில் ஆம் ஆத்மி தலைவர்கள் வரை பாஜக-வுக்கு எதிராக கருத்து பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் தமிழகத்தில் இந்த விவகாரம் இரு நாட்களாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டபோதும், திமுக தரப்பில் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.

இதேபோல காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பூவும் மெர்சல் விவகாரத்தில் பாஜக-வை கடுமையாக கண்டித்தார். இதில் முக்கிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவரான ராகுல் காந்தி இன்று (அக்டோபர் 21) மெர்சலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

அவர் தனது ட்விட்டரில், ‘மிஸ்டர் மோடி, தமிழ் கலாச்சாரம், மொழி ஆழம் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் திரைப்படம். மெர்சல் படத்தில் தலையிட்டு தமிழர்களின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்’ என குறிப்பிட்டிருக்கிறார். அதன்பிறகே ஸ்டாலின் ட்விட்டரில், மெர்சலுக்கு பட்டும் படாமலும் ஆதரவு கொடுத்து பதிவிட்ட தகவல் தெரியவந்தது.

மு.க.ஸ்டாலின் தனது பதிவில், நடிகர் விஜய் பற்றியோ, மெர்சல் குறித்தோ, அதில் உள்ள வசனங்கள் குறித்தோ எதுவும் கூறவில்லை. பொத்தாம் பொதுவாக, ‘ஜனநாயகப் பண்புகளுக்கு மாறாக விமர்சனங்களை நசுக்கி அழிக்க பாஜக முயற்சிக்கிறது. திமுக எப்போதும் பேச்சு சுதந்திரத்திற்கும் கருத்தாக்க சுதந்திரத்திற்கும் துணையாக நிற்கும்’ என கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

விஜய் பெயரை குறிப்பிட்டு ஸ்டாலின் ஆதரவு கொடுக்காததற்கு காரணம், இரு தரப்புக்கும் இடையே நீடிக்கும் பகைதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கடந்த திமுக ஆட்சியில் விஜய் படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளுக்கு எதிராக விஜய்-யும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கொதித்தார்கள். கடந்த 2011 தேர்தலில் வலியச் சென்று அதிமுக-வை ஆதரித்து விஜய் ரசிகர்கள் தேர்தல் பணியாற்றியது அதனால்தான்!

ஆனால் ஜெயலலிதா ஆட்சியிலும் விஜய்-க்கு அதே நெருக்கடி தொடர்ந்தது. எனவே 2014 தேர்தலையொட்டி கோவை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை தேடிச் சென்று சந்தித்தார். அண்மையில் மெர்சல் பட ரிலீஸுக்கு சிக்கல் எழலாம் என பேசப்பட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இருமுறை சந்தித்தார். இதுவும் திமுக-வின் டென்ஷனுக்கு காரணம்!

இதையெல்லாம்விட முக்கியம், ‘தளபதி’ என்றால் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தான் என்பது திமுக தொண்டர்களின் கருத்து. அதை உடைப்பதுபோல முதல் முறையாக தனது இளைய தளபதி பட்டத்தை துறந்துவிட்டு, மெர்சல் விளம்பரங்களில் தன்னை ‘தளபதி’ என விளம்பரப்படுத்துகிறார் விஜய். இதை திமுக தொண்டர்கள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை ரசிக்கவில்லை. விஜய் அரசியலுக்கு வந்தால், திமுக-வை பிரதானமாக எதிர்ப்பார் என்கிற கருத்தும் இருக்கிறது.

இவைதான் மெர்சலுக்கு பட்டும் படாமலும் ஸ்டாலின் ஆதரவு கொடுக்க காரணங்கள்! ஆதரவும் எதிர்ப்பும் அலை மோதிக்கொண்டிருக்க, விஜய் இது குறித்து வாயே திறக்காமல் இருப்பதும் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது.

 

Tamil Cinema Bjp Mk Stalin Dmk Actor Vijay H Raja Mersal Rahul Gandhi Tamilisai Soundararajan Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment