மேட்டூர் அணை நீர் திறப்பு: தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவில் கனமழை காரணமாக 26 ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது.
10, 2018
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்திறப்பு 25,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால், அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், முல்லைப்பெரியார் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இரண்டு மாநிலங்களிலும் பெய்து வரும் கனமழையை அடுத்து தமிழகத்தில் காவிரி கரையோரமுள்ள 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு ஆணையம் கூறியுள்ளது.
இதனையடுத்து மேட்டூர், சேலம், சங்ககிரி, எடப்பாடி காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர், சேலம், சங்ககிரி, எடப்பாடி காவிரி கரையோர மக்கள் பத்திரமாக இருந்துகொள்ள வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவித்துள்ளார்.