Advertisment

மக்களை வதைப்பது தான் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நோக்கமா? - ராமதாஸ்

எம்.ஜி.ஆரைப் பற்றி தெரியாதவர்கள் நூற்றாண்டு விழா நடத்துவதையும், மக்களைக் கொடுமைப்படுத்துவதையும் விட பெரிய அவமரியாதையை எம்.ஜி.ஆருக்கு செய்து விட முடியாது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
மக்களை வதைப்பது தான் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நோக்கமா? - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மக்களுக்கும், மாணவர்களுக்கும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்று அஞ்சப்பட்டதோ, அவை அனைத்தும் ஆளுங்கட்சியால் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான இச்செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

Advertisment

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கூட்டம் சேர்ப்பதற்காக மாவட்டம் முழுவதிலுமிருந்து மாணவர்களை சாதாரண உடையில் அழைத்து வரும்படியும், மக்களைக் கூட்டி வருவதற்காக தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் அவற்றின் வாகனங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுப்பப்பட்டதை கடந்த 29&ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன். அரசு நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நேர்மையாக நடந்திருந்தால் இந்த புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆளுங்கட்சியினரின் அடிமையாக செயல்படும் மாவட்ட நிர்வாகம் இப்புகார்களை கண்டுகொள்ள வில்லை. அதன்விளைவாக சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பணம் கொடுத்து ஆட்களைக் கொண்டு வருவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட எந்த அரசு விழாவுக்கும் மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. ஆனால், அதை மீறி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சாதாரண உடையில் கட்டாயப்படுத்தி எம்.ஜி.ஆர் விழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, மாணவர்களை விழாவுக்கு அனுப்ப மறுத்த பள்ளி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஒருபுறம் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அனுப்பக்கூடாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி விட்டு, மறுபுறம் மாணவர்களை அனுப்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாய்மொழியாக மிரட்டல் விடுப்பது உயர்நீதிமன்ற அவமதிப்பு என்பதைத் தவிர வேறென்ன?

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விழா நடைபெறும் இடமான சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சாலைகளை மறித்து அலங்கார வளைவுகள் மற்றும் பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் சேலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த விழாவுக்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதால் சேலம் வழியாக கேரளத்திற்கும், கேரளத்திலிருந்து சேலம் வழியாக மற்ற மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய வாகனங்கள் 70 கிலோ மீட்டருக்கும் கூடுதலாக சுற்றிச் செல்ல வேண்டியிருந்தன.

எம்.ஜி.ஆருக்கு இந்த அரசு கொண்டாடுவதே போலியான நூற்றாண்டு விழா ஆகும். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 2017-ஆம் ஆண்டு ஜனவரி வரை கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போது யாருக்கோ பயந்து எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மறுத்து விட்ட ஆட்சியாளர்கள், இப்போது தங்களின் அரசியல் நெருக்கடியிலிருந்து தப்புவதற்காக 101&ஆண்டு விழாவை நடத்தி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையில்லாத தொல்லைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். தங்களின் அரசியல் தேவைகளுக்காக அப்பாவி மக்களின் இயல்பு வாழக்கையை சீர்குலைக்கச் செய்வது மன்னிக்க முடியாத பெருங்குற்றம் ஆகும்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் எந்த செயலிலும் ஈடுபட்டதில்லை. தனது விழாவுக்கு கூட்டம் சேர்ப்பதற்காக பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களையும், மாணவர்களையும் மிரட்டி வரவழைத்ததில்லை. அதனால் தான் அவர் இப்போதும் மக்களால் நேசிக்கப்படுகிறார். ஆனால், பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ தன்னை இரண்டாவது எம்.ஜி.ஆராகவும், ஆண் ஜெயலலிதாவாகவும் நினைத்துக் கொண்டு அதிகார போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இத்தகைய ஆட்டங்களை எம்.ஜி.ஆரே விரும்ப மாட்டார்.

எம்.ஜி.ஆரைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் அவருக்கு நூற்றாண்டு விழா நடத்துவதையும், அவரது கொள்கைகளுக்கு எதிராக மக்களைக் கொடுமைப்படுத்துவதையும் விட பெரிய அவமரியாதையை எம்.ஜி.ஆருக்கு செய்து விட முடியாது. அனைத்து அத்துமீறல்களையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் மிகச்சரியான பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment