Advertisment

ஜவாஹிருல்லா-ஹைதர் அலி இடையே பூசல்? புகார் வீடியோ வெளியிட்டார் ஹைதர் அலி

MH Jawahirullah vs Hyder Ali: வீடியோவில் மமக தலைவர் ஜவாஹிருல்லாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. எனினும் ஜவாஹிருல்லா தரப்பை குறிப்பிடுவதாகவே அந்த வாசகங்கள் இருக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
M. H. Jawahirullah, Hyder Ali Tmmk Video, Rift in MMK, பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமுமுக பொதுச்செயலாளர் ஹைதர் அலி

M. H. Jawahirullah, Hyder Ali Tmmk Video, Rift in MMK, பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமுமுக பொதுச்செயலாளர் ஹைதர் அலி

பேராசிரியர் ஜவாஹிருல்லா-ஹைதர் அலி இடையே உருவாகியிருப்பதாக கூறப்படும் பூசல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியில் கவலையையும் உருவாக்கியிருக்கிறது.

Advertisment

பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக அரசியல் தளத்தில் இன்று தவிர்க்க முடியாத தலைவர். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும்கூட! இந்தக் கட்சியின் தாய் அமைப்பாக சொல்லப்படுவது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக)! இதன் தலைவரும் ஜவாஹிருல்லாதான்.

தமுமுக.வின் பொதுச்செயலாளராக இருப்பவர், ஹைதர் அலி! இஸ்லாமிய இயக்க தளகர்த்தர்களில் முக்கியமான மூத்த பிரமுகர் இவர்! தமுமுக என்கிற இயக்கத்தையும், மமக என்கிற அரசியல் கட்சியையும் ஒருங்கிணைந்த தண்டவாளம் போல நடத்திக் கொண்டிருந்த இந்த இரு தலைவர்கள் இடையேதான் பூசல் என்பதாக தகவல்கள் பரபரக்கின்றன. அதுவும் தேர்தல் கூட்டணி பேசி ஓரிரு இடங்களை பெற வேண்டிய தருணத்தில், தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக கொள்கை ரீதியாக களமாட வேண்டிய நேரத்தில் இந்த உள் அரசியல் அரங்கேறுவது அந்த அமைப்புக்குள்ளேயே பலருக்கும் வருத்தம்!

என்னதான் விஷயம்?

திமுக கூட்டணியில் மமக முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை பிப்ரவரி 21-ம் தேதி நடத்தியது. இதற்கான மமக குழுவில் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி இடம்பெறவில்லை. மமக குழுவினர் பேச்சுவார்த்தைக்கு புறப்படும்போது ஹைதர் அலி மண்ணடியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில்தான் இருந்தார். ஆனால் அவரை சேர்க்காமல் தமுமுக பொருளாளர் சஃபியுல்லாகான், மமக பொதுசெயலாளர் அப்துல் சமது ஆகியோரை பேச்சுவார்த்தைக்கு ஜவாஹிருல்லா அழைத்துச் சென்றாராம். இதில் ஹைதர் அலிக்கு வருத்தம்!

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 26-ம் தேதி மமக - தமுமுக நிர்வாகக்குழுக் கூட்டம் மண்ணடி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் ஹைதர் அலி மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டதாகவும், ஹைதர் அலி ஏற்பாட்டில் மார்ச் 3-ம் தேதி நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் கலந்துகொள்ள இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தபோது ஹைதர் அலி உகாண்டா நாட்டில் இருந்தார்.

இந்த நிலையில் பிப்ரவரி 28-ம்தேதி இரவு ஹைதர் அலி பேசிய ஒரு வீடியோ சமூக தளங்களில் ரிலீஸ் ஆனது. அதில் அவரது பேச்சு மமக, தமுமுக வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில் ஹைதர் அலி பேசியிருப்பது இதுதான்..

“இப்போது நைல் நதி உற்பத்தி ஆகும் இடத்தைப் பார்ப்பதற்காக நம்முடைய நண்பர்களோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நாமக்கல் வட்டத்தில் வருகிற 3-ம்தேதி ஒரு பொதுக்கூட்டத்துக்கு தேதி கேட்டிருந்தார்கள். முறையாக மாநிலச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர் அமீன் மூலமாக தகவல் அளிக்கப்பட்டு நானும், கோவை செய்யது, வழக்கறிஞர் ஜெயினுலாபுதீன் ஆகியோர் அதில் கலந்துகொள்வதாக இருந்தது.

அதன் பின்னர்தான் 3 ஆம் தேதிக்குப் பின்னர் நான் வெளிநாடு செல்வதற்கு டிக்கெட் போட்டிருந்தேன். ஆனால் 25-ம்தேதியே புறப்பட வேண்டும் என்று சொன்னதாலே இங்கே புறப்பட்டு வந்தேன். அதனால் குணங்குடி அனிபாவிடம் சொல்லி அவரும் வருவதாக ஒப்புக் கொண்டார்.

நான் இல்லாத நேரத்தில் இரண்டு நிர்வாகக் குழுக்களை நடத்தியிருக்கிறார்கள். 25-ம் தேதி நான் புறப்படுவது தெரிந்து 26-ம் தேதி நான் இல்லாமலேயே நிர்வாகக் குழுவை நடத்த வேண்டும் என்று எத்தனித்து ஒரு நிர்வாகக் குழுவை நடத்தியிருக்கிறார்கள். அந்த நிர்வாகக் குழுவில் நாமக்கல் கூட்டத்தை ரத்து செய்கிறோம் என்று தான் தோன்றித் தனமாக அறிவித்திருக்கிறார்கள்

இது முன்பே ஏற்பாடு செய்து எல்லாம் முடிந்தபிறகு இந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று அறிவிப்பை செய்திருக்கிறார்கள். ஆக தமுமுகவையும், மமகவையும் அழிப்பதற்கு அவர்கள் எத்தனிக்கிறார்கள். அது மிகுதியாக கண்டிக்க வேண்டியதாக இருக்கிறது. வேதனையாக இருக்கிறது.

3-ம் தேதி பள்ளிப்பாளையத்தில் கூட்டம் சிறப்பாக நடக்கும், அதில் எல்லாரும் கலந்துகொள்வார்கள். சிலர் மட்டும் கலந்துகொள்ள மாட்டார்கள். இந்தக் கூட்டத்தை வெற்றி அடையச் செய்யுமாறு தமுமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு வீடியோவில் பேசியிருக்கிறார் ஹைதர் அலி.

வீடியோவில் மமக தலைவர் ஜவாஹிருல்லாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. எனினும் ஜவாஹிருல்லா தரப்பை குறிப்பிடுவதாகவே அந்த வாசகங்கள் இருக்கின்றன. இது தொடர்பாக ஜவாஹிருல்லா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

 

Mh Jawahirullah Mmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment