Advertisment

குட்கா வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கருக்கு அமைப்புச் செயலாளர் பதவி: அதிமுக.வில் சலசலப்பு

சி.விஜயபாஸ்கருக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டிருப்பது, தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் சி.விஜயபாஸ்கர், குட்கா ரெய்டில் சிக்கியபோதும் அதிமுக.வில் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். அவருக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது கட்சிக்குள் சலசலப்பை கிளப்பியிருக்கிறது.

Advertisment

சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆனவர் இவர்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் முறை அறிவிக்கப்பட்டபோது, டிடிவி தினகரனுக்கு தேர்தல் பணிக்காக சுமார் 80 கோடி ரூபாய் சப்ளை செய்ததாக வருமான வரித்துறை சோதனையில் சிக்கினார் இவர்! அந்த விவகாரமே முடிவுக்கு வராத நிலையில், சட்டவிரோத குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் விவகாரத்திலும் இவரது பெயர் அடிபடுகிறது.

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இல்லத்தில் அண்மையில் இது தொடர்பாக சிபிஐ ரெய்டு நடத்தியது. இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், தமிழ்நாடு உணவு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சிபிஐ விசாரித்து வருகிறது.

சிபிஐ-க்கு மேற்படி நபர்கள் அளிக்கும் வாக்குமூலம் அடிப்படையில் அரசியல் பிரமுகர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கரையும், டிஜிபி ராஜேந்திரனையும் இந்த விவகாரத்தில் கைது செய்யவேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்து வருகிறார்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக அமைப்புச் செயலாளர்:

இந்தச் சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர் 14) மாலை நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்கு பிறகு ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் குட்கா ரெய்டில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனுக்கு அதிமுக சட்ட ஆலோசகர் பதவியும், முன்னாள் அமைச்சர் கரூர் பாப்பா சுந்தரத்திற்கு அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி க.பழனிசாமி ஆகியோர் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பதுதான் அதிமுகவில் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்து பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், ‘ஜெயலலிதா இருந்தவரை, கட்சியில் யார் மீதாவது புகார் வந்தால் தயவு தாட்சண்யம் இன்றி அவர்களின் கட்சிப் பதவியை பறிப்பார். ஆனால் இப்போது அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்படும் சூழல் இருக்கிறது. அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தருணத்தில் அவருக்கு ஏன் புதிய பதவி வழங்க வேண்டும்?

ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை, சிபிஐ சோதனை என ஆட்சி மீது கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது. கெட்ட பெயருக்கு காரணமானவர்களுக்கு கட்சிப் பதவியையும் கொடுத்தால், இவர்களுக்கு சசிகலா குடும்பமே தேவலை என்கிற எண்ணம் தொண்டர்களுக்கு உருவாகிவிடும்’ என்றார் அவர்!

அதே சமயம் இன்னொரு நிர்வாகி, ‘அதிமுக.வுக்கு இக்கட்டான இந்த காலகட்டத்தில் தன்னை நம்பி வந்த யாரையும் விட்டுக் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. எனவே அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஒருவேளை அமைச்சர் பதவியை இழக்க வேண்டிய கட்டாயம் உருவானாலும், கட்சியில் அவருக்கு அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்போது இந்தப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் 2ஜி வழக்கை எதிர்கொண்ட போதும் கட்சிப் பதவிகளில் தொடர்ந்தார்கள் அல்லவா? அதுபோலத்தான் இதுவும்!’ என்கிறார் அவர்!

சி.விஜயபாஸ்கருக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டிருப்பது, தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

 

Minister Vijayabaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment