அதிமுக உடையும் என ஸ்டாலின் நினைப்பது நடக்காது: அமைச்சர் ஜெயகுமார் உறுதி

Minister D Jayakumar Interview: கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு இருந்தது. தோல்வி என்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு எதிர்ப்பலை!

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி…

தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.தான் காரணம் என அமைச்சர்கள் சிலரே கூறி வருகிறார்களே?

அது கருத்துச் சுதந்திரம். இதை அவங்க (பாஜக) கட்சியின் மத்தியக் குழுவிலேயே சொல்லியிருக்காங்க. ‘மத்திய அரசின் திட்டங்களை நாம சரியா கொண்டு சேர்க்கல. தவறான பிரசாரம் காரணமா தமிழ்நாட்டில் ஒரு எதிர்ப்பு அலை உருவாகிடுச்சு. அதன் அடிப்படையில் இந்தத் தோல்வி’னு பேசியிருக்காங்க. இது ஒரு பிரச்னை இல்லை.


ஜெயலலிதாவின் தலைமையில் கட்டுப்பாடுக்கு பெயர் பெற்ற கட்சியாக இருந்த அதிமுக.வில், இப்போது ராஜன் செல்லப்பா, குன்னூர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசுவதை எப்படி எடுத்துக் கொள்வது?

‘அம்மா ஒரு கிரேட் லீடர். அவங்களை யாரோடும் கம்பேர் பண்ணக் கூடாது. அவங்களோட தனித்தன்மை, ஆளுமையுடன் இன்னொருவர் பொறக்க முடியாது. அவங்க மறைவுக்கு பிறகு கட்சி எப்படி போய்கிட்டு இருக்குன்னு பார்க்கணும். சின்ன சின்ன இஷ்யூஸ் இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் அப்பப்ப செட்டில் ஆயிடும்.

கட்சி ஒழுங்கா நடந்துகிட்டுத்தானே இருக்கு. ஆட்சி நடந்துகிட்டுத்தானே இருக்கு. இது ஸ்டாலினுக்கு பிடிக்கல. அதிமுக உடைஞ்சுடும்னு அவர் நினைச்சாரு. ஆட்சி போயிடும்னு நினைச்சாரு. ரெண்டும் நடக்கல.

இரட்டைத் தலைமைக்கு எதிராக முக்கிய நிர்வாகிகளே பேசுவது, கட்டுப்பாடை மீறிய செயல் ஆகாதா?

ராணுவக் கட்டுப்பாடு என்பது அம்மா காலத்தில் இருந்தது என்பது உண்மைதான். அதே கட்டுப்பாடு அம்மா மறைவுக்கு பிறகும் இருக்கணும்னு எதிர்பார்க்க முடியாது.
ஒண்ணுமே இல்லாம, நாலு பேரு இருக்கிற கட்சியிலேயே நாலு கோஷ்டி இருக்கு. இது கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய கட்சி. அப்படி இருக்கும்போது கருத்துகள் வரும். அதனால கட்சிக்கு ஒரு பாதிப்பும் வராது.

அமைச்சர் ஜெயகுமார் அளித்த சிறப்புப் பேட்டியின் முதல் பாகத்திற்கு இங்கு ‘க்ளிக்’ செய்யவும்.

ஆனாலும் கட்சி விஷயங்களை பொது இடங்களில் பேச வேண்டாம் என தலைமை வேண்டுகோள் வைத்திருக்கிறது. அதோடு முடிஞ்சிடுச்சு. ஆனா இதனால ஆட்சி கவிழும் என திமுக எதிர்பார்க்கிறது. அது ஒருபோதும் நடக்காது.

அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் அதிமுக.வின் வாக்கு வங்கியை சேதப்படுத்தியிருப்பதாக நினைக்கிறீர்களா?

அப்படி சொல்ல முடியாது. சராசரியா 70 சதவிகிதம் ‘போல்’ ஆச்சு. அதில் எங்க ஓட்டு, எங்க கட்சிக்குத்தான் கிடைச்சிருக்கு. நியூட்ரல் ஓட்டுகள் மாறிப் போயிருக்கு. சட்டமன்ற இடைத்தேர்தலில் 38 சதவிகிதம் வாங்கியிருக்கோம்னா, எங்க ஓட்டு கிடைச்சிருக்குன்னுதானே அர்த்தம்!

அதிமுக அணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு சரியில்லை என்பதாக தென் சென்னை, கோவை உள்ளிட்ட தொகுதிகளின் வாக்கு சதவிகிதம் காட்டுகிறதே?

கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு இருந்தது. தோல்வி என்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு எதிர்ப்பலை! எதிர்க்கட்சிகள் வைத்த கருத்துகளுக்கு நாங்க பதில் சொன்னோம். ஆனா அவங்க சொன்னது ரீச் ஆச்சு, நாங்க சொன்னது ரீச் ஆகல. இது தற்காலிக பின்னடைவு. இது நிரந்தரம் இல்லை.

இரட்டைத் தலைமை என்பது தேர்தல் அரசியலில் பலவீனமாக தோன்றவில்லையா?

பலவீனம் என்பதைவிட, அம்மா இருந்தப்போ அவங்க (ஜெயலலிதா) பலசாலி! ஆட்சி, கட்சி என்கிற தேரை அவங்களே வடம் பிடிச்சு இழுத்துட்டுப் போனாங்க. ஆனா இன்னைக்கு எல்லோரும் சேர்ந்துதான் அம்மா உருவாக்கிய ஆட்சியையும், தலைவர் உருவாக்கிய கட்சியையும் வடம் பிடித்து இழுத்துட்டுப் போயாகணும். இதுல வித்தியாசம் ஒண்ணும் இல்லை.

ஒற்றைத் தலைமை என்பதை நோக்கிய நகர்வுகள் இருக்குமா?

அதைப் பற்றி இப்போ பேசவேண்டிய அவசியம் இல்லை. காலம் முடிவு செய்யும். எந்தப் பிரதிபலனையும் பாராமல் வாழ்நாள் முழுவதும் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தொண்டன் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அது. இப்போது அந்த சர்ச்சை அவசியமில்லை.

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்போது, ஆட்சி மாற்றம் ஏற்படும் என மு.க.ஸ்டாலின் கூறுவது பற்றி?

அவர் இதே போலத்தான் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் கூறினார். அவரைப் போல வழக்கு விவரங்களுக்குள் போக நான் விரும்பவில்லை. எது எப்படியிருந்தாலும், மக்கள் தீர்ப்பு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அது வரையில் இவர் (மு.க.ஸ்டாலின்) ஒண்ணும் பண்ண முடியாது. 2021-ல் எலக்‌ஷன் வரும்போது அம்மா திட்டங்களை நாங்க நிறைவேற்றுவதை எடுத்துச் சொல்வோம். நிச்சயம் நாங்கதான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close