Advertisment

விருப்பு வெறுப்பின்றி பழகிய பண்பாளர் துரைக்கண்ணு: அமைச்சர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலக் குறைவால் சனிக்கிழமை இரவு காலமானார். அமைச்சர் துரைக்கண்ணு தான் வகித்த பொறுப்புகளில் துடிப்புடன் பணியாற்றியவர் என்று முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
minister doraikkannu paased away, leaders condolence, அமைச்சர் துரைக்கண்ணு மறைவு, தலைவர்கள் இரங்கல், முதல்வர் பழனிசாமி இரங்கல், cm edappadi k palaniswami, minister doraikkannu, முக ஸ்டாலின் இரங்கல், mk stalin condolence

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலக் குறைவால் சனிக்கிழமை இரவு காலமானார். அமைச்சர் துரைக்கண்ணு தான் வகித்த பொறுப்புகளில் துடிப்புடன் பணியாற்றும் சிறப்புக்குரியவர் என்று அமைச்சரின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

வேளாண்துறை அமைச்சரும் பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலக் குறைவால் நேற்று (அக்டோபர் 31) இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளர். விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு. இந்த துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைக்கண்ணு தான் வகித்த பொறுப்புகளில் துடிப்புடன் பணியாற்றும் சிறப்புக்குரியவர் என்று அமைச்சரின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வேளாண்மைத்துறை அமைச்சர் அண்ணன் ஆர்.துரைக்கண்ணு உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

வேளாண்மைத்துறை அமைச்சர் அண்ணன் ஆர்.துரைக்கண்ணு எம்ஜிஆர் தலைமையில் அதிமுகவில் 1972ம் ஆண்டு சேர்ந்து திறம்பட பணியாற்றியவர். கட்சி மீது மிகுந்த பற்றும் கொள்கைகளின் மீது உறுதியும் கொண்டவர். அதிமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றவர்.

எம்.ஜி.ஆர் காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவராக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.”

என்ற வள்ளுவரின் கூற்றுப்படி அண்ணன் ஆர்.துரைக்கண்ணு ஒரு செயலை செய்ய எண்ணி விட்டால் அதை செய்து முடிக்கும் மன உறுதி உடையவராக இருந்து அதில் வெற்றி கண்டவர்.

ஆரம்ப காலத்தில் இருந்தே கட்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர். என்னிடம் மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் பழகியவர். அனைவரிடமும் விருப்பு, வெறுப்பின்றி அன்புடன் பழகும் பண்பாளர். மூன்றுமுறை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராகவும் 15 வருடம் தொடர்ந்து பாபநாசம் ஒன்றிய கழகச் செயலாளராகவும் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். தான் வகித்த பொறுப்புகளில் துடிப்புடன் பணியாற்றியவர் என்ற சிறப்புக்குரியவர் அண்ணன் துரைக்கண்ணு.

புரட்சித் தலைவி அம்மா (ஜெயலலிதா) விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் ஆர்.துரைக்கண்ணுவை 2016ம் ஆண்டு வேளாண்மைத்துறை அமைச்சராக நியமனம் செய்தார்கள்என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து எனது அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றி மக்கள் நன்மதிப்பைப் பெற்றவர்.

அண்ணன் ஆர்.துரைக்கண்ணு அவர்களின் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் எனக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது மனைவி மகன்கள் மகள்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெர்வித்துள்ளார்.

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல். பொதுவாழ்வில் உள்ள அனைவரும் சுய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்திட வேண்டும். அமைச்சரை இழந்து வாடும் குடும்பத்தினர், சக அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதல்.” என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் நீத்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது.

பாபநாசம் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைக்கண்ணு அவர்கள், தமிழ்நாடு அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மிகவும் எளிமையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவரையும் மதிக்கின்ற பண்பாளர். அவரது மறைவினால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கள் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழக வேளாண்துறை அமைச்சரும், அதிமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான துரைக்கண்ணு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

தஞ்சாவூர் மாவட்டம் இராஜகிரி கிராமத்தில் மிகவும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த துரைக்கண்ணு கடுமையான உழைப்பின் காரணமாக அமைச்சராக உயர்ந்தார். பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன்பின் வந்த இரு தேர்தல்களிலும் அப்பதவியை தக்க வைத்துக் கொண்டார். 2016-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வேளாண்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். மிகவும் எளியவராகவும், அணுகுவதற்கு எளிமையானவராகவும் திகழ்ந்த அவர், தொகுதி மக்களின் அன்பை பெற்றிருந்தார்.

என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது மதிப்பு கொண்டிருந்தவர். கடந்த 13-ஆம் தேதி திண்டிவனம் அருகே மகிழுந்தில் சென்ற போது உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர், உடனடியாக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையின் பயனாக குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வேளாண் துறை அமைச்சர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு. அவரது குடும்பத்தினருக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு தஞ்சை மாவட்டத்திற்கும் அதிமுகவிற்கும் பேரிழப்பு என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கள் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைக்கண்ணு மறைவால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் என்று தமிழச்சி தங்க பாட்னிஅயன் தெரித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Aiadmk Edappadi K Palaniswami M K Stalin Doraikannu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment