திண்டுக்கல் மாவட்டம் அருகே பொட்டிகுளம் பகுதியில் நேற்று ஏற்பட்ட கார் விபத்தில் ஷாலினி என்ற பெண் பத்திரிக்கையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மரணத்திற்கு அமைச்சர் ஜெயகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு சங்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அருகே நண்பர்களுடன் இணைந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில் ஷாலினி என்ற பெண் நிருபர் பரிதாபமாக பலியானார். இவரின் மறைவுக்கு தமிழக அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், “மாலைமுரசு தொலைக்காட்சியின் நிருபர் ஷாலினி விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஒருகணம் நிலைகுலைந்து போனேன். தினமும் காலைநேரத்தில் நான் அலுவலகம் கிளம்பும் முன் எனது வீட்டருகே செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அப்படியான சந்திப்புகளின் போது, துடிப்புடனும், பொறுப்புடனும் கேள்விகளை ஏந்தி வரும் அந்த சின்னஞ்சிறு பெண் நிருபர் ஷாலினி என் கவனத்தை எப்போதும் ஈர்ப்பார். பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்து, செய்தித்துறையில் சாதித்திட பல கனவுகளை கண்டிருந்த அந்த இளம் செய்தியாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார், அதுவும் பிறந்தநாளில் உயிரிழந்தார் என்ற செய்தி என்னை உலுக்கி விட்டது. ஷாலினியின் உருவம் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் உயிரோடு இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது மனம். நாளை செய்தியாளர் சந்திப்பின் போது ஒளிரும் கண்களுடனும், சிரித்த முகத்துடன், வலுவான கேள்விகளை ஏந்திவரும் ஷாலினியை எங்கே என்று தேடுவேன். செய்தியாளர்களே, நண்பர்களே அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், உங்கள் உயிர் விலைமதிப்பில்லாதது, சமூகத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் பெரிய சொத்து. பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ளுங்கள். விபத்தில்லா நெடுவாழ்வு வாழுங்கள். உயிரிழந்த ஷாலினியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஷாலினி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரின் குடும்பத்திற்கு உரிய உதவிகளை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இரங்கல் செய்தியில், “திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள பள்ளப்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்த சென்னை, “மாலை முரசு” செய்தியாளர் தோழி ஷாலினி அவர்கள் இன்று (15.07.2018) தனது சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் போது திண்டுக்கல் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் தனது பிறந்த நாளிலேயே மரணமடைந்த செய்தி தந்தையின் ஸ்தானத்தில் இருக்கும் எங்களுக்கு சொல்லெனாத் துயரத்தை தந்திருக்கிறது.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, சிறந்த ஊடகவியலாராக வேண்டும் என்கிற கனவுகளோடு சென்னையில் பணியாற்றிய அந்தப் பிஞ்சு மலரை “காலன் விபத்து எனும் பாசக் கயிற்றை வீசி உயிரை பறித்திருப்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது”. அச்செய்தியை கேட்ட நமக்கே இப்படி என்றால் தங்களின் மகளை நன்றாக படிக்க வைத்து ஆயிரம் கனவுகளோடு சென்னையில் பணியாற்ற அனுப்பி வைத்த அந்த தோழியின் பெற்றோர் நிலையை நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.
தங்களின் மகளை இழந்து நிற்கும் அவரது பெற்றோருக்கு மகளின் இழப்பினை தாங்கும் மனோதிடத்தை இறைவன் தந்தருளட்டும். தோழி ஷாலினி அவர்களின் ஆத்மா இறைவனின் பாதத்தில் இளைப்பாறட்டும்.
அவரது மறைவிற்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குவதோடு, ஏழ்மை நிலையில் உள்ள அவரது குடும்பத்துக்கு உதவிட தமிழக அரசு முன் வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.” என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.