'வெறும் பொம்மைகளாக இருக்கிறோம்'! - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார், உலக பொம்மை தின வாழ்த்து

நாம் வெறும் பொம்மைகளாக இல்லாமல், சமூகத்தின் படைப்பாளிகளாக இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூன் 8), உலக கடல் தினம். இதனையொட்டி, மாணவ மாணவிகளுக்கு இடையே கடலின் அவசியம், அதை பாதுகாப்பது குறித்த கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் மீன்வளத்துறை சார்பில் நேற்று நடத்தப்பட்டன. இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதன் பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளிக்கையில், “உலகின் முதல் உயிரினமான அமீபா, தோன்றியது கடலில்தான். அதன்பின் தான் மற்ற உயரினங்கள் தோன்றின. மனிதர்களும் தோன்றினார்கள். எனவே அப்படிப்பட்ட கடலை பாதுகாக்கும் வகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கடல் மாசுவை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மக்களிடமும் விழிப்புணர்வு தேவை. அதற்காக மாணவர்களுக்கு கடல் தினத்தையொட்டி பல போட்டிகளை நடத்தி வருகிறோம். சுவாசிக்கும் ஆக்சிஜனில் 80 சதவீதம் கடல்தான் கொடுக்கிறது. இது பலருக்கும் தெரியாது.

அதுமட்டுமின்றி, இன்று(ஜூன் 9) உலக பொம்மைகள் தினம். ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை நினைச்சி பார்த்தா எல்லாம் பொம்மை’ என்ற வரிகளுக்கு ஏற்ப நாம் அனைவரும் பொம்மைகளாகவே வாழ்கிறோம். இந்த பேரண்டத்தில் பூமி என்பது சுண்டைக்காய் போன்றது. அந்த சுண்டைக்காயில் வாழும் நாம் ஒட்டுமொத்தமாக பொம்மைகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் வெறும் பொம்மைகளாக இல்லாமல், சமூகத்தின் படைப்பாளிகளாக இருக்க வேண்டும் என்பதை வாழ்த்தாக கூறிக்கொள்கிறேன்” என்றார்.

தமிழகத்தை ஆளும் தற்போதைய அதிமுக அரசு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்றும், முதல்வர் உட்பட அனைவரும் பிரதமர் மோடி ஆணைக்கிணங்கவே செயல்படுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வரும் நிலையில், நாம் அனைவரும் பொம்மைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, ‘நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் பெறும் வெற்றி அரசியல் வெற்றி ஆகாது‘ என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close