மு.க ஸ்டாலின், ஓபிஎஸ், கமல் ஆகியோர் சேர்ந்து கூட்டு வைத்தது போல தெரிகிறது: ஜெயக்குமார்

கமல்ஹசன் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். கமல் ஏதாவது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தாரா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மு.க ஸ்டாலின், ஓ.பி.எஸ் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கூட்டு வைத்திருப்பது போன்று தெரிவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது என்று கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, பதிலளிக்கும் வகையில் பேசிய தமிழக அமைச்சர்கள் கமல்ஹாசன் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தனர். சில அமைச்சர்கள் வழக்குப் போட்டுவிடுவேன் என்றும், வருமான வரிசோதனை முறையாக கட்டினாரா என்பதை சோதனை செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். மேலும், தொலைக்காட்சி பேட்டியின் போது கமல்ஹாசனை ஒருமையில் பேசவும் செய்தனர்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவிக்கையில், கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது. அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பின்னர் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்வோம் என்று கூறினார்.

பாஜக-வின் தேசியச் செயலாளர் எச். ராஜா கூறும்போது, கமல்ஹாசன் முதுகெலும்பற்றவர் என்று விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கெல்லாம், பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் நச்சென பதிவிட்டிருந்தார் கமல்ஹாசன்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கமல்ஹசன் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறுகிறார். ஆனால், எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என கூறும் கமலஹாசன் நதிநீர் பிரச்சனை, இட ஓதுக்கீடு போன்ற விவகாரத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை?

ஹிந்தி படத்தில் நடித்த, இந்தி எதிர்ப்பு சுதந்திர போராட்ட வீரர் சகோதரர் கமலுக்கு வாழ்த்துக்கள்.

தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளான காவிரி நதிநீர் பிரச்சனை, கச்சத்தீவு, இடஓதுக்கீடு, முல்லைப் பெரியாறு இப்படி எவ்வளவோ பிரச்சனைகள் பல ஆண்டு காலமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், கமல்ஹாசன் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு எப்போது குரல் கொடுத்தார் என்பது ஒரு புரியாத புதிராக இருக்கிறது.

கமல்ஹசன் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். அது எந்த ஆண்டு? கமல் ஏதாவது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தாரா என்பதை நடுநிலையார்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கமல்ஹாசனுக்கு, மு.க ஸ்டாலின், ஓ.பி.எஸ் ஆகியோர் வக்காலத்து வாங்குகின்றனர். அப்படி பார்க்கும்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஒரு கூட்டு வைத்துள்ளது போன்றே தெரிகிறது. எந்த புகாராக இருந்தாலும் சரி, ஆதாரங்களின் அடிப்படையில் இருந்தால் கூறட்டும். அது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது. இல்லையேல், நீதிமன்றத்திற்கு செல்லட்டும், வழக்குகளை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close