Advertisment

கூட்டுறவுத் துறையில் திருப்தி இல்லையா? பி.டி.ஆர் கருத்துக்கு அமைச்சர் பெரியசாமி பதில்

கூட்டுறவுத்துறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை என பி.டி.ஆர் பேச்சு; மக்களையும், முதல்வரையும் தவிர, வேறு யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கூட்டுறவுத் துறையில் திருப்தி இல்லையா? பி.டி.ஆர் கருத்துக்கு அமைச்சர் பெரியசாமி பதில்

கூட்டுறவுத்துறை செயல்பாட்டில் நிதியமைச்சராக தனக்கு திருப்தி இல்லை என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதற்கு, மக்களுக்கும், முதல்வருக்கும் திருப்தி உள்ளது, வேறு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பதில் அளித்துள்ளார்.

Advertisment

மதுரையில் கூட்டுறவு வார விழாவில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கூட்டுறவுத் துறையை மாற்ற வேண்டும். கூட்டுறவுத்துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக உள்ளது என்றாலும், தற்போதைய செயல்பாட்டு திறன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். கூட்டுறவுத்துறையில் தினமும் ரெய்டுகள் நடத்தப்படுவது, ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பது என பல செய்திகள் வருகின்றன.

இதையும் படியுங்கள்: கர்ப்பிணிகள் நலனில் அக்கறை கொள்ளாவிட்டால் நமது வருங்காலம் சிதைந்து விடும் – பி.டி.ஆர்

கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்படாமல் இருப்பதால் பல பிழைகள், தவறுகள் நடைபெறுகின்றன. நடமாடும் ரேசன் கடைகளுக்கு உரிய செல்வதில்லை எனவும் புகார்கள் வருகின்றன. நிதி அமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை, என்று கூறினார்.

நிதியமைச்சர் கூட்டுறவுத்துறையில் திருப்தி இல்லை என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மக்களையும், முதல்வரையும் தவிர, வேறு யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவு துறை அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முதன்மையாக திகழ்கிறது. விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் வேகமாக செயல்படுகிறது. இதுவரை ரூ.7,200 கோடி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.900 கோடி கடன் வழங்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து கடன் வழங்கும் பணி நடக்கிறது. சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி ரசீது வழங்கும் பணி திண்டுக்கல்லில் இன்று முதல் தொடங்குகிறது. கோவையில் நாளை தொடங்கும். தமிழகம் முழுவதும் தொடர்ந்து ரசீது வழங்கப்படும். மேலும் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகபட்ச கடன் வழங்குகிறோம்.

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் கூட்டுறவுத்துறை கிடங்குகளில் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை வைத்து கொண்டு, எந்த மாநிலத்திலும் விற்கும் வசதி உள்ளது. கம்பு, சோளம் உள்ளிட்ட எந்தப் பொருளையும் இருப்பு வைக்கலாம். இதற்காக இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்து மத்திய அரசு கேடயம் வழங்கப்படுகிறது.

கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில் தலைமை வங்கி, முதன்மையான வங்கி என்ற பரிசை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்குகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய கடன் உட்பட ரூ.35 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட்டும் அதிக அளவில் வந்துள்ளது. அந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும் எந்த வங்கியிலும் கடன் பெறலாம் என்ற திட்டத்தையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம். மாநில அளவிலான விழாவில் இது குறித்து அறிவிப்பு வரவிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடத்தல்கள் தடுக்கப்பட்டுள்ளது. சுமார் 13000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேசனில் தரமான அரிசி வழங்கப்பட்டு, அனைத்து பொருட்களும் முறையாக வழங்கப்படுகிறது. கொரோனா நிவாரணம் 4000 ரூபாயை 99.9% பேருக்கு வழங்கியுள்ளோம். யாரும் பணம் கிடைக்கவில்லை என்று கூறவில்லை. கடந்த ஒன்றறை ஆண்டுகளில் எப்போதும் போல் பணி நடந்ததில்லை. கழிப்பிட வசதியுடன் ரேசன் கடைகள் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் கூட்டுறவு ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்டு உள்ளனர். அதற்கான நிதியை அரசிடம் எதிர்பார்க்காமல், லாபத்தில் இருந்து மாத ஓய்வூதியம் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கும் விரைவில் அறிவிப்பு வெளியாகும். மாநிலம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன்கடைகள் உள்ளன. எங்கு தவறு நடந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். அதுவும் வெளிப்படை தன்மையோடு, தகுதியின் அடிப்படையில் நடைபெறும், என்று கூறினார்.

அப்போது, நிதி அமைச்சர் பி.டி.ஆர். கருத்து குறித்த கேள்விக்கு, வெளிப்படை தன்மையில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். குறைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கு, என்ன நடந்தது என்று கூறினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். எங்கே தவறு நடந்தது? என்று அவரிடம் கேளுங்கள். மக்கள் திருப்தி அடைவதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். 7 கோடி மக்களும், முதலமைச்சரும் திருப்தி அடையவேண்டும். அதற்காக நாங்கள் பணியாற்றுகிறோம். வேறு யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

நான் 50 ஆண்டு கால அரசியலில் இருக்கிறேன். இவர் (அருகில் இருந்த அமைச்சர் அர.சக்கரபாணியை காண்பித்து) 35 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறார். தொடர்ந்து 6 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மக்களிடம் சேர்ப்பதே எங்களின் வேலை. நாங்கள் மக்களின் வேலைக்காரர்கள். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். மக்களுக்கு திருப்தி ஏற்பட வேண்டும். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட சங்கங்களின் தலைவர்கள் உள்ளனர். நாங்கள் யாரிடமும் பாகுபாடு பார்த்தது இல்லை. கூட்டுறவு என்பது மக்களுக்கான இயக்கம். கூட்டுறவுத்துறை மக்களுக்காக உருவாக்கப்பட்டது. உணவுத்துறையும் மக்களுக்காக உருவாக்கப்பட்டதே. இந்த துறைகளில் எங்கேயாவது குறை இருக்கிறது என்று கூறினால் உங்களை மாலை போட்டு வரவேற்று, குறைகளை சரிசெய்து திருப்திபட்டு கொள்வோம்.

மக்கள் தான் திருப்தியை பற்றி கூறவேண்டும். ஒருவேளை ரேஷன்கடையைப் பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை என்பது பற்றி கவலையில்லை. நாங்கள் நிதியே கேட்கவில்லை. மக்களும், முதலமைச்சரும் திருப்தியாக இருக்கிறார்கள். பொதுநல நோக்கோடு அரசியலுக்கு வந்தோம். திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறோம். வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்று செய்ததில்லை, என பதில் அளித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Ptrp Thiyagarajan I Periyasamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment