"நீங்க அழகா இருக்கீங்க"! பெண் ரிப்போர்ட்டருக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

பெண் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, பதில் சொல்வதை தவிர்ப்பதற்காக, ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். வரும் 19 முதல் 22-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து, பெண் செய்தியாளர் ஒருவர் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, “நீங்கள் அழகா இருக்கீங்க… கண்ணாடி போட்டதால் கூடுதல் அழகாக இருக்கீங்க… என்று பதில் அளித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

மறுபடியும் அந்த பெண் செய்தியாளர் கேள்வி கேட்டபோது, இன்று நீங்கள் இன்னும் அழகாக இருக்கிறீர்கள் என்கிறார். மீண்டும் மீண்டும் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காமல், நீங்க அழகா இருக்கீங்க, அழகா இருக்கீங்க, அழகா இருக்கீங்க என்று மூன்று தடவை கூறிவிட்டு செல்கிறார்.

கேள்வியை தவிர்ப்பதற்காக அமைச்சர் இதுபோன்று நடந்து கொண்டாலும், அவரது இந்த கமெண்ட் தற்போது பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டரில், “அனைத்து பத்திரிகை நிருபர்களையும் சகோதர சகோதரியாகவே நான் பார்க்கிறேன். அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே நான் முற்பட்டேன்; யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்புகையில், சம்பவத்திற்கு மன்னிப்பும் கோரினார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close