Advertisment

கமல் மீது வழக்குப்போடுவேன் என மிரட்டும் அமைச்சர்களே எங்கள் மீது வழக்கு போட தயாரா? மு.க ஸ்டாலின்

நான் ஆதாரங்களோடு விஜயபாஸ்கர் செய்திருக்கக்கூடிய ஊழல், அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கக்கூடிய ஊழல் குறித்தும் பேசியிருக்கிறேன்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin - Assambly - 16.06.17

கமல்ஹாசன் மீது வழக்குப் போடுவேன் என்று சொல்லக்கூடிய அந்த தைரியம், அந்த பிரசாரம், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஊழல் குற்றாச்சாட்டுகள் சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் மீது வழக்குப் போட தயாராக இருக்கிறார்களா என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, தமிழக சட்டமன்றத்தில் திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். அதன் பின்னர் செய்திளார்களிடம் மு.க ஸ்டாலின் கூறியதாவது: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களில் இருக்கக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இன்றைக்கு பெரும்பான்மையுடன் இருக்கக்கூடிய மத்திய பாரதிய ஜனதா கட்சி தொடக்கத்தில், ‘அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையோடு, போட்டியின்றி குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்’, என்று ஒரு கபட நாடகத்தினை நடத்திவிட்டு, தன்னிச்சையாக ஒரு வேட்பாளரை நிறுத்திய காரணத்தால், இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பது உள்ளபடியே வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

இருந்தாலும், ஆளும்கட்சியான பாஜக நிறுத்தியுள்ள வேட்பாளரை எதிர்த்து 17 கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணியாக சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு, களத்தில் இறக்கியிருக்கின்றன என்று சொன்னால், அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு அடிகோலாக அமைந்திருக்கிறது என்பது தான் எனது கருத்து. அந்தவகையில், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜனநாயக அடிப்படையில் எங்கள் வாக்குகளை பதிவு செய்திருக்கிறோம் என்று கூறினார்.

செய்தியாளர்: திமுக தலைவர் கலைஞர் அவர்கள் வாக்களிக்க வருவாரா?

ஸ்டாலின்: மருத்துவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. எனவே, இன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் வாக்களிக்க வாய்ப்பில்லை.

செய்தியாளர்: திமுக சார்பில் 88 பேரும் வாக்களித்து உள்ளார்களா?

ஸ்டாலின்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அத்தனை பேரும் வாக்களித்துள்ளனர்.

செய்தியாளர்: கமல்ஹாசன் தொடர்ந்து இந்த அரசு குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அதற்கு வேறு மாதிரியான கருத்துக்கள் அதிமுக தரப்பில் இருந்து வருகிறது. மிரட்டல் விடுக்கும் விதமாக அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அது பற்றிய உங்கள் கருத்து?

ஸ்டாலின்: அதாவது, அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, வாக்களித்திருக்கக் கூடியவர்களுக்கு, ஓட்டுரிமைப் பெற்றிருக்கக் கூடியவர்களுக்கு ஜனநாயக ரீதியில் ஒரு அரசை விமர்சிப்பதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அந்த அடிப்படையில்தான் கமல்ஹாசன் தன்னுடைய கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார். அப்படி எடுத்து வைத்திருக்கக்கூடிய காரணத்தால், அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக்கூடிய பலர் இன்றைக்கு அவரை மிரட்டுவது, அச்சுறுத்துவது, வழக்குப் போடுவேன் என்று சொல்வது எல்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்.

பொத்தாம் பொதுவாக ஊழல் நடந்துக் கொண்டிருக்கிறது, முறைகேடு நடந்துக் கொண்டிருக்கிறது, அனைத்துத் துறைகளிலுமே ஊழல் என்றுதான் அவர் சொன்னார். அதற்கே அவர் மீது வழக்கு போடுவோம் என்று சொல்பவர்கள், நான் ஆதாரங்களோடு சட்டமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் விஜயபாஸ்கர் செய்திருக்கக்கூடிய ஊழல், அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கக்கூடிய ஊழல், போலீஸ் கமிஷனர் செய்திருக்கக்கூடிய ஊழல் என இந்த ஊழல்கள் மீதெல்லாம் வருமான வரித்துறையினர் மூலமாகவும், அதேபோல தேர்தல் கமிஷன் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்திருக்கக்கூடிய அந்த கடிதங்களின் அடிப்படையில், நான் தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கமல்ஹாசன் மீது வழக்குப் போடுவேன் என்று சொல்லக்கூடிய அந்த தைரியம், அந்த பிரசாரம், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஊழல் குற்றாச்சாட்டுகள் சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் மீது அவர்கள் வழக்குப் போட தயாராக இருக்கிறார்களா? அப்படி, வழக்குப் போட்டால் அதை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment