ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் என திமுக அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்பட 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் முடிந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக தி.மு.க. அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஈ.வி.கே.எஸ் .இளங்கோவனை ஆதரித்து தி.மு.க.வில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த பட்டியலில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், மேலும் பல அமைச்சர்கள் உள்ப்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இடைத் தேர்தலையொட்டி தொகுதியில், கட்சிகள் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
அதுபோல, வருகிற 19 ஆம் தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் என திமுக அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“