ரேட் வைத்து கமிஷன் அடிப்பதை நிறுத்தினாலே கடன் சுமை குறையும் - முதல்வரை சந்தித்த பின் ஸ்டாலின் பரபர!

போக்குவரத்துக்கழக சீரமைப்பு பற்றிய ஆய்வு அறிக்கை முதல்வரிடம் தரப்பட்டது என்று ஸ்டாலின் பேட்டி

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

ஊதிய உயர்வு, ஓய்வுக்கால பலன்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 5 முதல் 11-ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் மு.க.ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்தார். போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, கே.என்.நேரு, தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், டி.செங்குட்டுவன் எம்எல்ஏ ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இக்குழு தனது அறிக்கையை நேற்று முன்தினம் ஸ்டாலினிடம் வழங்கியது.

இதைத் தொடர்ந்து, இன்று மதியம் 12 மணிக்கு போக்குவரத்துக்கழக சீரமைப்பு பற்றிய ஆய்வு அறிக்கையை  தமிழக முதல்வரிடம் ஸ்டாலின் வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் பேசுகையில், “போக்குவரத்துக் கழக ஆய்வறிக்கையை முதல்வரிடம் தந்துள்ளோம். இதைப் பொறுத்தவரையில் 27 பரிந்துரைகள் அடங்கியுள்ளன. இந்த அறிக்கையின்படி செயல்பட்டால், மக்கள் தலையில் பேருந்து கட்டணத்தை சுமத்த வேண்டிய அவசியமில்லை. போக்குவரத்து கழக நஷ்டத்தை முழுவதும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மத்திய தொகுப்பு நிதியம், தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து ஒருங்கிணைப்பு ஆணையம் ஆகியவற்றை உருவாக்கி போக்குவரத்துக் கழகத்தை சீரமைக்க வேண்டும்.

அடுத்து, டீசல் மற்றும் பெட்ரோல் மீது மத்திய அரசு விதித்துள்ள கலால் மற்றும் மதிப்புக் கூட்டு வரி அதிகமாக இருக்கும் காரணத்தால் இரு அரசுகளும் இந்த வரிகளை ரத்து செய்துவிட்டு, ஒரே சீராக 10 சதவிகித ஜிஎஸ்டி வரியை மட்டும் விதிக்க வேண்டும். அதேபோல், பயணிகள், டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு மாதம்தோறும் நல்லிணக்க முகாம்கள் நடத்திட வேண்டும். பேருந்துகளை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற 27 பரிந்துரைகளை நாங்கள் முதல்வரிடம் எடுத்துக் கூறியிருக்கிறோம். முதல்வரை சந்தித்த போது துணை முதல்வர், போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களும் உடன் இருந்தனர்.

ஆய்வறிக்கைகளை வாங்கிக் கொண்டார்களே தவிர, அவர்கள் வேறு எந்த உறுதிமொழியையும் தரவில்லை. அரசு நிர்வாகம் செயல்பட முடியாத காரணத்தால் தான், எதிர்க்கட்சியான நாங்கள் இந்த நிர்வாகத்தை சீர்படுத்தும் யோசனையை அளித்துள்ளோம், இதை அவர்கள் செயல்படுத்தினால் உள்ளபடியே மகிழ்ச்சி அடைவோம். ஒருவேளை அலட்சியப்படுத்தினால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம். கமிஷன் வாங்குவது, லஞ்சம் வாங்குவது, ரேட் வைத்து கமிஷன் அடிப்பது போன்றவற்றை நிறுத்தினாலே போக்குவரத்துக் கழக கடன் சுமை குறையும்.

நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு சட்டமன்றத்தில் படம் திறந்துள்ளார்கள். இதைக் கேட்டால் முரசொலி மாறன் சிலையை நாடாளுமன்றத்தில் திறந்தது ஏன்? என கேட்கிறார்கள். இது அபத்தமானது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரை ஆளும் கட்சி அழைத்தும் ஜெயலலிதா படம் திறப்பு நிகழ்வுக்கு அவர்கள் வரவில்லை. இல்லையென்று, அமைச்சர் ஜெயக்குமாரை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் ஏ1 குற்றவாளியாக இருந்திருப்பார்” என்றார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close